சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
55-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட புதுமைப் பெண், தமிழ்ப்
புதல்வன் ஆகிய திட்டங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்து வருகிறது. அரசுப்
பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதமும்
உயர்ந்துக் கொண்டிருக்கிறது. இதேபோல, 2 ஆயிரத்து 553 டாக்டர்கள் காலிப்
பணியிடங்களுக்கு கடந்த மாதம் 5-ந்தேதி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக 89 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 2
ஆயிரத்து 642 காலிப்பணியிடங்களுக்கு சான்றிதழ் சாரிபார்ப்புகள் நடைபெற்று
முடிந்துள்ளது.
தற்போது காலிப்பணியிடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. தொடர்ந்து, கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 2 ஆயிரத்து 642
பேருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டு அவரவர் விரும்பும் இடங்களில் பணியில்
அமர்த்தப்பட இருக்கிறார்கள். இன்னும் 10 நாட்களுக்குள் முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு பணி ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment