வாழ்க்கையை வளப்படுத்தும் 10 பழக்கங்கள் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Saturday 26 November 2022

வாழ்க்கையை வளப்படுத்தும் 10 பழக்கங்கள்

வாழ்க்கையை வளப்படுத்தும் 10 பழக்கங்கள் 


அன்றாட வாழ்க்கை முறையில் பின்பற்றும் ஒருசில பழக்கவழக்கங்கள் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க வழிவகை செய்யும். வாழ்க்கையை வளப்படுத்தும். 
 1. 30 நிமிடம் ஓடுங்கள் தினமும் 30 நிமிடங்கள் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதற்கு பழகுங்கள். இது கவனச் சிதறலை கட்டுப்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும். இலக்கை எட்டுவதற்கான ஊக்க சக்தியை கொடுக்கும். 
 2. 6 மணிக்குள் எழுந்திருங்கள் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பது எண்ணற்ற நன்மைகளை கொடுக்கும். அவசரமின்றி நிதானமாக புறப்பட்டு செல்வதற்கான கால அவகாசத்தை வழங்கும். அதனால் தேவையற்ற டென்ஷனை தவிர்க்கலாம். முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவதற்கும், சிந்திப்பதற்கும் போதுமான நேரம் கிடைக்கும். காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது புத்துணர்வை கொடுக்கும். தினமும் காலையில் 5 முதல் 6 மணிக்குள் படுக்கை அறையை விட்டு வெளியே வரும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். 
 3. நன்றி சொல்லுங்கள் நன்றியுள்ள விஷயங்களைப் பற்றி சிந்திக்க தினமும் ஐந்து நிமிடங்களை ஒதுக்குங்கள். அது நீங்கள் செய்த உதவிக்கு மற்றவர்கள் நன்றி கூறியதாக இருக்கலாம். அல்லது பிறர் உங்களுக்கு செய்த உதவிக்கு நீங்கள் நன்றி தெரிவித்ததாக இருக்கலாம். அது பற்றி ஐந்து நிமிடங்கள் நினைத்து பார்ப்பது மனதுக்கு இதமளிக்கும். நன்றி கூறும் பண்பை வளர்த்துக்கொள்ள உதவும். 
 4. இலக்கை பற்றி சிந்தியுங்கள் எந்தவொரு இலக்கையும் ஒரே நாளில் எட்டிப்பிடித்துவிடமுடியாது. ஆனால் அதனை எட்டுவதற்கு மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், செயல்பாடுகள் பற்றி சிந்திப்பதற்கு தினமும் 5 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். அது இலக்கை நோக்கி முன்னேறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வழிவகுக்கும். இலக்கை கைவிடாமல் தொடர்ந்து முன்னேறுவதற்கு வழிகாட்டும். 
 5. முக்கிய பணிகளை முடியுங்கள் தினமும் செய்ய வேண்டிய பணிகளில் முக்கியமான மூன்று பணிகளை காலை 11 மணிக்குள் முடித்துவிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அது சின்னச் சின்ன வேலையாக கூட இருக்கலாம். சட்டென்று வேலையை முடித்துவிடுவது மனதை ரிலாக்ஸாக்கும். அடுத்தடுத்த பணிகளை உற்சாகமாகவும், விரைவாகவும் செய்து முடிப்பதற்கு தூண்டுகோலாக அமையும். 
 6. உணவு பற்றி திட்டமிடுங்கள் இன்று என்ன உணவு சாப்பிடப் போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். அதன்படியே மூன்று வேளை உணவையும் சாப்பிடுங்கள். அது தேவையற்ற உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க உதவும். உடலில் கூடுதல் கலோரிகள் சேர்வதும் தவிர்க்கப்படும்.

 7.செலவுகளை எழுதி வையுங்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை நோட்டிலோ, செல்போனிலோ குறித்து வையுங்கள். அது தினமும் எவ்வளவு செலவாகிறது என்பதை கண்காணிக்க உதவும். நிதி மேலாண்மையை கையாளவும் துணைபுரியும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதற்கும் வழிவகுக்கும். 
 8. தினமும் எழுதுங்கள் அன்றைய நாளில் உங்களின் செயல்பாடுகள் எவ்வாறு அமைந்தது என்பதை தினமும் 5 வரிகளாவது எழுதுங்கள். அது உங்கள் எண்ணங்களாகவோ, பிரச்சினைகளாகவோ இருக்கலாம். இந்த பழக்கம் அதற்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்பதற்கு வழிகாட்டும். பிரச்சினைகளை சுமுகமாக கையாளும் மனப்பக்குவத்தை கொடுக்கும். 
 9. உங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள் எத்தகைய வேலைப்பளுவாக இருந்தாலும் சரி தினமும் உங்களுக்காக ஒரு மணி நேரத்தை ஒதுக்குங்கள். அது தனிமை சூழலில் அமைந்திருந்தால் சிறப்பானது. உங்களை பற்றி சுய பரிசோதனை செய்து கொள்வதற்கு அது உதவும். 

 10. புத்தகம் படியுங்கள் தினமும் தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வாசிக்கும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். அது நீங்கள் விரும்பும் எந்தவொரு புத்தகமாகவும் இருக்கலாம். அப்படி செய்வதன் மூலம் வருடத்திற்கு சுமார் 20 முதல் 30 புத்தகங்களை படித்து முடித்துவிடலாம். வாசிப்பு பழக்கம் மனதை இலகுவாக்கும். சிந்தனை ஆற்றலையும், படைப்பாற்றல் திறனையும் அதிகரிக்கச் செய்யும்.

No comments:

Post a Comment