நிலநடுக்கம் ஏற்படப் போவதை ஒரு மணி நேரத்திற்கு முன்பே கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்கியுள்ளார் புதுச்சேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர். இயற்கைப் பேரிடர்களில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது நிலநடுக்கம். பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, புவி தளத்தட்டுகள் நகர்வதனால் ஏற்படும் அதிர்வே நில நடுக்கம். நிலநடுக்கத்தால் புவி அதிர்வு ஏற்பட்டு கட்டடங்கள், பாலங்கள் தரைமட்டமாகின்றன. 

நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. இதே போல, சுனாமி போன்ற ஆழிப்பேரலையும் கடலுக்கடியில் நிகழும் நிலநடுக்கத்தால் ஏற்படுவதே. இயற்கைப் பேரிடர்களில் இதுவரை உலக விஞ்ஞானிகளால் கணிக்க முடியாத ஒன்றாக நிலநடுக்கம் இருக்கிறது. நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணரும் கருவிகளைக் கண்டுபிடிக்க சர்வதேச விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் நிலநடுக்கம் வருவதை ஒரு மணி நேரத்துக்கு முன்பே கண்டறியும் கருவியை புதுச்சேரியை அடுத்த தென்னம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐ.டி.கே. மணிமாறன் என்ற 32 வயது இளைஞர் கண்டறிந்துள்ளார். 

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் பொறியியல் பட்டயப் படிப்பு படித்துக் கொண்டிருந்த மணிமாறன் குடும்பச்சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே கைவிட நேர்ந்தது. என்றாலும் தற்போது சவுண்ட் சர்வீஸ் பணியைச் செய்கிறார். செய்யும் வேலைக்குச் சிறிதும் தொடர்பில்லாத நிலநடுக்கம் குறித்த அறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறார். நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணரும் கருவியை அவர் கண்டுபிடித்துள்ளார். 

 இதுகுறித்து மணிமாறன் கூறியதாவது: 

 ""கடந்த 2001- ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். நிலநடுக்கம் வருவதற்கு முன்பே அதனைக் கண்டறிய முடிந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காதே என்று நினைத்தேன். அது தொடர்பான ஆராய்ச்சிகளைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். இதற்கு முன்பு செயற்கைகோள்களின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கணக்கீடுகளைச் செய்து, நாட்டின் சில இடங்களில் பூகம்பம் வருவதை முகநூல் மூலம் முன்கூட்டியே எடுத்துக் கூறினேன். அடுத்ததாக, நிலநடுக்கம் சம்பந்தமான சர்வதேச அளவிலான புத்தகங்களை, இணையதள இதழ்களைப் படித்தும், கடந்த 15 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தேன். 

தொடர்ந்து, பெங்களூர் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ராஜன் உதவியுடன், ரூ. 40 ஆயிரம் செலவில் நிலநடுக்கத்தை ஒரு மணி நேரத்துக்கு முன்பாக உணரும் கருவியைக் கண்டறிந்துள்ளேன். இக் கருவிக்கு "மணிமாறன் எர்த் குவாக் சென்சார்' அதாவது எம்எம்இஎஸ் என பெயர் வைத்துள்ளேன். ஆக்ùஸலரோமீட்டர், ஜீனோகிராபிக் சென்சார், ஈரப்பதத்தைக் கண்டுணரும் டிஎச்டி சென்சார், ஜிபிஎஸ், ஜிஎஸ்எம், ஆர்டிசி என்ற கடிகாரம் உள்ளிட்டவற்றை ராஸ்பரிபை என்ற சிறு கணினியுடன் இணைத்து இந்த எம்எம்இஎஸ் என்ற கருவியை உருவாக்கியிருக்கிறேன். 

 இந்தக் கருவியின் மூலம் 150 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பூமிக்கு அடியில் அல்லது மேற்பரப்பில் நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிய முடியும். அதிலுள்ள கருவிகள் வழியாக, செல்லிடப்பேசிக்கு எச்சரிக்கை செய்தியும் கிடைக்கும். இதுமட்டுமின்றி, இருக்கும் இடத்திலிருந்து 150 கி.மீ. வரை உள்ள ஈரப்பதம், வெப்பநிலை, பருவநிலை மாற்றம், காற்றின் தன்மை உள்ளிட்டவற்றையும் அறியலாம். 

இதற்காக அண்மையில் காப்புரிமையும் பெற்றுள்ளேன். இதையறிந்த வெளிநாட்டு நிறுவனங்கள் என்னைத் தொடர்பு கொண்டு, நேரில் வந்து விளக்கமளிக்கும்படி கோரியுள்ளன. இதனை ஏற்று வெளிநாடுகளுக்கு விரைவில் செல்லவுள்ளேன். மத்திய, மாநில அரசுகள் எனது கண்டுபிடிப்புக்கு ஊக்கமளித்து, நிதியுதவி செய்தால், மேலும் அதிக தூரத்தில் வரும் பூகம்பத்தை உணரும் கருவியை வடிவமைக்க முடியும்'' என்றார் மணிமாறன்.

Post a Comment

Previous Post Next Post