மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு பள்ளிகள் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Tuesday 27 July 2021

மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு பள்ளிகள்

மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகள் அசத்தி வருகின்றன. கொரோனாவால் முடங்கிய பள்ளிகள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே கொரோனா காரணமாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பலரும் பொருளாதார ரீதியாக அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளனர். மீண்டு எழுந்துவரும் சூழ்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்தது. 


இதன் காரணமாக மேலும் பொருளாதார ரீதியாக பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. பொதுத்தேர்வு இல்லாமலேயே 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோர், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தினால் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

திருச்சி மாவட்ட பள்ளிகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் நடப்பு கல்வி ஆண்டுக்கு (2021-22) மாணவ, மாணவிகள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் மொத்தம் 862 உள்ளன. அவற்றில் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளிகள் 232, பஞ்சாயத்து யூனியன் பள்ளிகள் 735, ஆதிதிராவிட நலப்பள்ளிகள் 94, மாநகராட்சி பள்ளிகள் 3, நகராட்சி பள்ளிகள் 30 ஆகும். அரசு நடுநிலைப்பள்ளிகள் மொத்தம் 208 உள்ளன. 

அரசு உயர்நிலைப்பள்ளிகள் மொத்தம் 119 உள்ளன. மேல்நிலைப்பள்ளிகளை பொறுத்தவரை மொத்தம் 103 உள்ளன. ஆக மொத்தமாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 1,513 அரசு பள்ளிகள் உள்ளன. இதுதவிர அரசு உதவி பெறும் பள்ளிகள் 366, மெட்ரிக் பள்ளிகள் 140, சி.பி.எஸ்.இ. மற்றும் இதர பள்ளிகள் 84 உள்ளன. 

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு திருச்சி மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் (2020-21) அரசு பள்ளிகளில் பிளஸ்-2 வரை 1 லட்சத்து 48 ஆயிரத்து 846 பேர் படித்தனர். தற்போது நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) 1 லட்சத்து 56 ஆயிரத்து 79 என அதிகரித்துள்ளது. அதாவது, கூடுதலாக 7 ஆயிரத்து 233 மாணவ, மாணவிகள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். 1-ம் வகுப்பில் 722, 2-ம் வகுப்பில் 560, 3-ம் வகுப்பில் 177, 4-ம் வகுப்பில் 1,536, 5-ம் வகுப்பில் 1,652, 7-ம் வகுப்பில் 299, 8-ம் வகுப்பில் 379, 10-ம் வகுப்பில் 343, 11-ம் வகுப்பில் 906, 12-ம் வகுப்பில் 1,436 மாணவ, மாணவிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

 அதே வேளையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்து 668 மாணவர்களும், தனியார் பள்ளிகளில் இருந்து 13 ஆயிரத்து 72 மாணவர்களும் வெளியேறி இருக்கிறார்கள். அங்கு, கூடுதல் கல்வி கட்டணம், முழுமையாக கட்டணம் செலுத்தினால்தான் புத்தகம் தரப்படும் என்று பெற்றோரை நோகடிப்பதும் மாணவர்கள் வெளியேறி வருவதாக சொல்லப்படுகிறது. 

பெரம்பலூர் 

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 530 பள்ளிகள் உள்ளன. இதில் அரசு பள்ளிகள் 360 உள்ளன. இந்த கல்வியாண்டில் தற்போதைய நிலவரப்படி அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் புதிதாக 351 பேரும், யு.கே.ஜி.யில் 167 பேரும், 1-ம் வகுப்பில் 4,160 பேரும், 2-ம் வகுப்பில் 854 பேரும், 3-ம் வகுப்பில் 962 பேரும், 4-ம் வகுப்பில் 790 பேரும், 5-ம் வகுப்பில் 764 பேரும் புதிதாக சேர்ந்துள்ளனர். இதேபோல் அரசு நடுநிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பில் 404 பேரும், 7-ம் வகுப்பில் 88 பேரும், 8-ம் வகுப்பில் 45 பேரும் புதிதாக சேர்ந்துள்ளனர். 

மேலும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பில் 3,718 பேரும், 7-ம் வகுப்பில் 299 பேரும், 8-ம் வகுப்பில் 288 பேரும், 9-ம் வகுப்பில் 1,320 பேரும், 10-ம் வகுப்பில் 50 பேரும், 11-ம் வகுப்பில் 4,984 பேரும், 12-ம் வகுப்பில் 5 பேரும் புதிதாக சேர்ந்துள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். 

அரியலூர் 

அரியலூர் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்புக்கு 4,674 மாணவ-மாணவிகள் சேர்ந்தனர். ஆனால் இந்த கல்வியாண்டில் 1-ம் வகுப்பில் கூடுதலாக 258 பேர் என மொத்தம் 4,932 பேர் சேர்ந்துள்ளனர். இதேபோல் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பில் கடந்த கல்வியாண்டை விட, இ

ந்த கல்வியாண்டில் கூடுதலாக 1,433 பேர் என மொத்தம் 7,425 பேர் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பில் கடந்த கல்வியாண்டை விட, இந்த கல்வியாண்டில் கூடுதலாக 673 பேர் என மொத்தம் 5,807 பேர் சேர்ந்துள்ளனர். 

 புதுக்கோட்டை 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 1,570 அரசு பள்ளிகளும், 89 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 23 பகுதி உதவி பெறும் பள்ளிகளும், 284 தனியார் பள்ளிகளும் என மொத்தம்1,966 பள்ளிகள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு மற்றும் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர் பலர் சேர்த்துள்ளனர். 

இதேபோல தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு தங்களது குழந்தைகளை பெற்றோர் பலர் மாற்றி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் இருந்து 5 ஆயிரத்து 933 மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளுக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர் சேர்க்கை விவரம் கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது வழக்கம். 

அந்த வகையில் இந்த கல்வி ஆண்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை 1,570 பள்ளிகளில் மாணவர்கள் 84 ஆயிரத்து908 பேரும், மாணவிகள் 90 ஆயிரத்து 670 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 578 மாணவ-மாணவிகள் படித்துவருவதாக தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மாணவர் சேர்க்கை விவரம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த பணி முடிவடைந்த பின்பு தான் முழு விவரம் தெரியவரும் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். தற்போது வரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளதாக கூறினர். கரூர் கரூர் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் (2020-21) அரசு பள்ளிகளில் எஸ்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரையிலும் 79 ஆயிரத்து 753 பேர் படித்தனர். 

தற்போது நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) 81 ஆயிரத்து 11 பேர் என அதிகரித்துள்ளது. இதில், யு.ஜி.கே.ஜியில் 25, 2-ம் வகுப்பில் 317, 3-ம் வகுப்பில் 57, 5-ம் வகுப்பில் 841, 7-ம் வகுப்பில் 278, 8-ம் வகுப்பில் 26, 10-ம் வகுப்பில் 344, 11-ம் வகுப்பில் 185, 12-ம் வகுப்பில் 676 பேர் அதிகரித்துள்ளனர். எல்.கே.ஜியில் 90, 1-ம் வகுப்பில் 238, 4-ம் வகுப்பில் 280, 6-ம் வகுப்பில் 380, 9-ம் வகுப்பில் 499 பேர் குறைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மொத்தம் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை 1258 பேர் அதிகமாக சேர்ந்துள்ளனர். 

 காரணம் என்ன? 

மாணவர் சேர்க்கை அதிகரிப்புக்கு காரணம், அரசு பள்ளி ஆசிரியர்களின் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. பல கிராமங்களில் பள்ளி ஆசிரியர்கள் ஒலிபெருக்கி மூலமும், வீடு வீடாக சென்றும், ‘‘மாணவர்களின் படிப்புக்கும், கல்வித்திறன் மேம்பாட்டுக்கும் நாங்கள் கேரண்டி’’ என கேரண்டி கார்டும் பெற்றோர்களிடம் கொடுத்து உறுதி அளித்து இருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் தற்போது அரசு பள்ளிகளில் சேர்வதற்கு, கொரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 

இதில் பெற்றோர் பலர் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களது குழந்தைகளை தொடர்ந்து கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். மேலும் அரசு பள்ளிகளில் இலவச கல்வி முறையோடு, தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும் மாறியுள்ளன. அரசின் பல்வேறு உதவிகள் அனைத்தும் கிடைப்பதாலும் தற்போது இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment