ரஷ்யா விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற நடைபெற்ற முதற்கட்ட நுழைவுத்தேர்வில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். சென்னையைச் சார்ந்த நிறுவனமான 'இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோனேடிக்ஸ் அண்ட் ஏவியேஷன்' நிறுவனம், வானியல் தொடர்பான படிப்பை வழங்கி வருகிறது.இதன் சார்பில், நாடு முழுதும், 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரஷ்யா விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இதற்காக நான்கு கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்க, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்திஇருந்தது. முதற்கட்டமாக நடந்த தேர்வில், தேர்வு செய்யப்பட்ட 10 மாணவர்களில், முதல் இரண்டு இடத்தை, சென்னை அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி டி.அருணா, மாணவர் எஸ்.சண்முகம் ஆகியோர் பெற்றுள்ளனர். 

இவர்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டி, கேடயம் வழங்கினார். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பிரபுதாஸ் கூறுகையில், ''எங்கள் பள்ளியில் இருந்து கடந்தாண்டு மூன்று மாணவர்கள் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்துள்ளனர். ''இந்தாண்டு முதற்கட்ட தேர்வில், விண்வெளி பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இது பள்ளிக்கும், ஆசிரியர்களாகிய எங்களுக்கும் பெருமையைத் தருகிறது,'' என்றார். அடுத்தடுத்து நடக்கும் தேர்விலும் வெற்றி பெற்று ரஷ்யா செல்வோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post