கொரோனா தொற்றால் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தமுடியாமல் போனது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று மத்திய-மாநில கல்வி வாரியங்களால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை மாநில வாரிய பாடத்திட்டத்தின்கீழ் படித்த பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண்களை கணக்கிட்டு அறிவித்தது.
அதேபோல், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் முடிவுகள் வருகிற 31-ந் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதற்காக நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் கணக்கிடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
22-ந் தேதிக்குள் (இன்று) மதிப்பெண்கள் கணக்கிடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பர்த்வாஜ், அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதிப்பெண் கணக்கிடும் தேதி (22-ந் தேதி) வேகமாக நெருங்கிவருவதால், ஆசிரியர்கள் பலர் மனஅழுத்தத்தில் உள்ளதாகவும், சிலர் பீதியில் தவறுகளை செய்துவருவதாகவும், இதை சரிசெய்ய வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு கோரிக்கைகள் வந்தன.
அதை கருத்தில் கொண்டு, மதிப்பெண்களை கணக்கிட 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. கடைசி நேரத்தில் அவசரமாக மதிப்பெண்களை வழங்காமல், கொடுக்கப்பட்ட நேரத்தில் மதிப்பெண் முடிவுகளை தொகுத்து வழங்குவதில் தொடர்ந்து பணியாற்ற ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். கொடுக்கப்பட்ட கால நேரத்துக்குள் முடிக்காமல், ஏதாவது பள்ளிகளில் மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்கும் பணிகள் எஞ்சியிருந்தால், அந்த பள்ளிகளின் முடிவு தனியாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment