கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோவில் நிலம்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் ஆகும். இந்த நிலங்களின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள "தமிழ் நிலம்" மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. 

MOST READ 



அவற்றுள் தற்போது முதல் கட்டமாக 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டு, அந்த நிலங்களின் ‘அ’ பதிவேடு, நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் 9-ந்தேதி (இன்று) வெளியிடப்பட உள்ளது. இது மொத்தமுள்ள நிலங்களில் 72 சதவீதம் ஆகும்.
உரிமை ஆவணங்கள்
பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் “திருக்கோவில்கள் நிலங்கள்” என்ற தலைப்பை தேர்வு செய்து அதன்பின்னர் பட்டியலிடப்பட்டுள்ள கோவிலைத் தேர்வு செய்தவுடன் கோவிலுக்குச் சொந்தமான முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள் திரையில் தோன்றும். அந்த நிலங்களின் ‘அ’ பதிவேடு, நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது மட்டுமின்றி, பகுதியாக ஒத்துப்போகும் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறை ஆவணங்களோடு ஒத்தாய்வு செய்யப்பட்டு, உரிய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக மாற்றம் செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். 

கோவில்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களின் உரிமை ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கோவில்களது பெயரிலேயே இருக்கும் வகையிலான அனைத்து தொடர் நடவடிக்கைகளும் இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து ஏதேனும் கருத்துக்களை அல்லது கோரிக்கைகளைப் பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் “கோரிக்கைகளைப் பதிவிடுக” திட்டத்தின் கீழ் பதிவிடலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post