வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் 3 மாதங்களுக்குள் புதுப்பித்து கொள்ள சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுப்பித்தல் சலுகை
வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை 2017, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பு பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அரசு ஆணையின்படி இந்த சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிட்டவாறு இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் இந்த அரசாணை வெளியிடப்பட்ட 3 மாதங்களுக்குள் அதாவது வருகிற 27.8.2021-ந்தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் பதிவை புதுப்பித்து கொள்ளலாம்.
இணையதள முகவரி
இணையம் மூலமாக புதுப்பித்தல் பணியை மேற்கொள்ளும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி தங்கள் பதிவினை புதுப்பிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடையோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment