அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Saturday 6 February 2021

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பதாகையின் கீழ், பலகட்ட சந்திப்பு, முறையீடுகள் பலனளிக்காத பின்னணியில், அரசு ஊழியர்கள் பிப்ரவரி 2, 2021 முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தினமும் கைதாவதும், மாலையில் விடுவிக்கப்பட்டாலும் உறுதியோடு மறியலை தொடர்வதுமாய் போராட்டக் களத்தில் நிற்கின்றனர். தமிழகத்தின் பல ஊர்களில் 5 நாட்களாக இரவு-பகல் பாராது கொளுத்தும் வெயில், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது வீதிகளில் அமர்ந்து போராடி வருகிறார்கள். சில மையங்களில் காவல்துறையின் அடக்குமுறையையும் எதிர் கொண்டுள்ளார்கள். பெண் ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் களத்தில் இருக்கின்றனர். அவர்களின் முக்கியக் கோரிக்கைகளாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது, நிரப்பப்படாத காலியிடங்கள், தொகுப்பூதியம்- மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்க்கு காலமுறை ஊதியம், முடக்கப்பட்ட பஞ்சப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் தொகை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வோம் என்பது கடந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க அளித்த வாக்குறுதியாகும். அடுத்த சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையிலும் அரசு வாளாவிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. லட்சக் கணக்கான காலியிடங்களை நிரப்பாமல் இருப்பது இளைஞர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதாகும். ஐந்து நாட்களாக போராடும் அரசு ஊழியர்களை அழைத்து பேச முதல்வர் இதுவரை முன்வரவில்லை. கோவிட்டை எதிர் கொள்வதில் சிறப்பான மக்கள் சேவை ஆற்றிய அரசு ஊழியர்களுக்கு அரசு தருகிற பரிசு இதுதானா என்ற கேள்வி எழுகிறது. ஆகவே, அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவிப்பதோடு, தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment