பள்ளிகள் திறப்பையொட்டி ஆயத்தப் பணிகள் துவங்கியது 


 கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுவதால், பள்ளிகளில் வர்ணம் பூசுதல், துாய்மை உள்ளிட்ட ஆயத்தப் பணிகள் துவங்கியது. 

 கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பள்ளி, கல்லுாரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 16ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் கல்வியாளர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். அதையடுத்து, நவம்பர் 9ம் தேதி பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது.பெரும்பாலான பெற்றோர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கலுக்கு பிறகு திறக்க அரசு ஆலோசித்தது.இது தொடர்பாக பெற்றோர்களிடம் மீண்டும் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை கருத்து கேட்கப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் 222 உயர்நிலை, 243 மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட்ட கருத்து கேட்பில், பள்ளிகளைத் திறக்கலாம் என, 70 சதவீதத்தினர் கருத்து தெரிவித்திருந்தனர். இதே கருத்தை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கேட்பில் பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர். அதன்படி, வரும் 19ம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

பொங்கல் விடுமுறை முடிந்து, உடனடியாக பள்ளிகள் திறக்கப்படுவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் வகையில், கடலுார் மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற கூட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று நடந்தது. அப்போது, பள்ளிகளை உடனடியாக துாய்மை செய்தல், வர்ணம் பூசுதல், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உடனடியாக முடிக்கவும், மாவட்டக் கல்வி அதிகாரிகள் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளில் உடனடியாக ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாவட்டம் முழுதும் பெரும்பாலான பள்ளிகளில் அதிரடியாக துாய்மைப் பணிகள் துவங்கியது. மாவட்டக் கல்வி அதிகாரிகளான கடலுார் சுந்தரமூர்த்தி, சிதம்பரம் மோகன், விருத்தாசலம் சுப்ரமணி, வடலுார் செல்வராஜ் ஆகியோர் தங்கள் பகுதிக்குட்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்து, விரைந்து துாய்மை பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர். வகுப்பறைகளில் சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள் முடிந்ததும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர ஏற்பாடுகள் செய்யப்படும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post