நுழைவு தேர்வு
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. உள்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை
பொறியியல் படிப்பில் (எம்.இ, எம்.டெக், பிஎச்.டி) சேர கேட் நுழைவுத் தேர்வு
நடத்தப்படுகிறது. சில தனியார் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வு அடிப்படையில் மாணவர்
சேர்க்கையை நடத்துகின்றன. படிப்பதற்கு மட்டுமல்லாமல், பல்வேறு பொது துறை
நிறுவனங்களும் (PSU) கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வேலைக்கு ஆட்களை தேர்வு
செய்கின்றன.
தேர்வு நடைமுறை
கேட் நுழைவு தேர்வானது, கணினி வழியிலேயே (CBT) நடத்தப்படுகிறது. இதில் தேர்வர்கள்
கணினித் திரையில் காண்பிக்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். தேர்வுக்கான
மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட உள்ளன. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல்
கழகம் (IISc) மற்றும் மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், மெட்ராஸ்
மற்றும் ரூர்க்கியில் உள்ள ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து ஒவ்வொரு
ஆண்டும் சுழற்சி முறையில் கேட் தேர்வை நடத்துகிறது.
பாடப்பிரிவுகள் மற்றும் மதிப்பெண்கள்
2015-ம் ஆண்டு முதல் இத்தேர்வை எழுத, இணைய வழியிலேயே விண்ணப்பிக்க வேண்டும். கேட்
நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில்
நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 65 கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
தேர்வானது 3 மணி நேரம் வரை நடைபெறும். இதில் பொதுத் திறன் (general aptitude)
பற்றிய 10 கேள்விகளும், தேர்வர்கள் தேர்ந்தெடுத்த பாடத்தில் இருந்து 55 கேள்விகளும்
இடம்பெறும். 1 மதிப்பெண் மற்றும் 2 மதிப்பெண் கேள்விகள் இதில் உள்ளடங்கி இருக்கும்.
தேர்வு வினாக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். தேர்வர்கள் பெற்ற கேட் மதிப்பெண், தேர்வு
முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
கேள்வியின் வகைகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கேட் தேர்வுத் தாள்களில் மூன்று வகையான கேள்விகள்
உள்ளன. மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் (MCQ); மல்டிபிள் செலக்ட் கேள்விகள் (MSQ);
மற்றும் எண் பதில் வகை (Numerical Answer Type-NAT) ஆகிய மூன்று வகையான கேள்விகள்
இருக்கும். இதில் எண் பதில் வகை கேள்விகளில் தேர்வர்கள் விர்ச்சுவல் கீபோர்ட்
(virtual keypad) பயன்படுத்தி கணித விடைகளுக்கு பதிலளிக்க வேண்டும். இதில்
மல்டிபிள் சாய்ஸ் கேள்வியில் தவறான பதிலுக்கு, எதிர்மறை மதிப்பெண்கள் (NEGATIVE
MARK) இருக்கும். 1 மதிப்பெண் கேள்வியில், பதில் தவறாக இருந்தால் 1/3 மதிப்பெண்
கழிக்கப்படும். 2 மதிப்பெண் கேள்வியில், தவறான பதிலுக்கு 2/3 மதிப்பெண்
கழிக்கப்படும். மல்டிபிள் செலக்ட் கேள்விகள் அல்லது எண் பதில் வகை கேள்விகளில்
தவறான விடைக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இல்லை.
தகுதி
ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
ஆண்டுகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது ஏற்கனவே பொறியியல், தொழில்நுட்பம்,
கட்டிடக்கலை, அறிவியல், வணிகம், கலை, மனிதநேயம் போன்றவற்றில் அரசு அங்கீகாரம் பெற்ற
பட்டப்படிப்பை முடித்தவர்கள் கேட் தேர்வில் கலந்துகொள்ளலாம். அத்துடன் பொறியியல்
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு
தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு இல்லை.
கட்டணம்
பெண் தேர்வர்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு 900 ரூபாயும், மற்ற அனைத்து
தேர்வர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு 1800 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வெளிநாட்டினரும் எழுதலாம்
வங்கதேசம், எத்தியோப்பியா, சிங்கப்பூர், நேபாளம், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து
தேர்வை எழுதலாம். இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் இருந்து தேர்வு எழுதுவோர் இளங்கலை
படிப்பின் மூன்றாம் ஆண்டு அல்லது மேற்படிப்பு படித்து கொண்டு இருக்க வேண்டும்.
மேலும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் இத்தேர்வை எழுதலாம். சிங்கப்பூர் மற்றும்
ஜெர்மனியில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்லூரி மேற்படிப்புகளில் மாணவர்கள்
சேர கேட் தேர்வு மதிப்பெண்ணையும் கருத்தில் கொள்கின்றன. இதுபோல இந்தியாவிற்கு
வெளியே உள்ள பல்வேறு நிறுவனங்களாலும் கேட் தேர்வு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தேர்வின்போது...
தேர்வின் போது குறிப்பெடுப்பதற்காக தேர்வர்களுக்கு ஒரு ஸ்கிரிப்பிள் பேடு
வழங்கப்படும். அந்த ஸ்கிரிப்பிள் பேடில் தேர்வரின் பெயர் மற்றும் பதிவு எண் எழுத
வேண்டும். தேர்வின் முடிவில் கண்காணிப்பாளரிடம் அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் நுழைவுச் சீட்டு மற்றும் செல்லுபடியாகும் அரசு அடையாள
அட்டையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வின் போது கணினித் திரையில் ஒரு
மெய்நிகர் அறிவியல் கால்குலேட்டர் (VIRTUAL CALCULATOR) இருக்கும். தேர்வின் போது
தேர்வர்கள் அதையே பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட கால்குலேட்டர்கள்,
கைக்கடிகாரங்கள், பர்ஸ், செல்போன்கள், புளூடூத் சாதனங்கள் மற்றும் மின்னணு மற்றும்
தொடர்பு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது. மேலும் தேர்வர்கள்
புத்தகங்கள், விளக்கப்படங்கள், வாய்ப்பாடு, பேப்பர், தரவுகள், கையேடுகள், பை
ஆகியவற்றை தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது. அத்தகைய பொருட்களை வைத்திருந்தால்,
தேர்வர்கள் தேர்வில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

إرسال تعليق