கடலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவான அரசு பள்ளிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

100 சதவீத தேர்ச்சி 

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதியும், பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதியும் தொடங்க உள்ளது. அதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த பொதுத் தேர்வையொட்டி பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வுகள் கடந்த 7-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருவதுடன், மாணவ- மாணவிகளுக்கும் ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் வழங்க கல்வித்துறை அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

சிறப்பு அலுவலர்கள் 

 இதுகுறித்து கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு 94.36 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். இதில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ளது. அதனால் நடப்பாண்டு அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, கடந்த தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவான பள்ளிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது 10 உயர்நிலை அலுவலர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள். அதேபோல் கூடுதல் ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்துதல் என இக்குழு அலுவலர்கள் பல்வேறு பணிகளை தொடங்கி உள்ளனர் என்றார்.


Post a Comment

Previous Post Next Post