நான் முதல்வன் திட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற 148 என்ஜினீயரிங் மாணவிகளுக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
நேர்காணல்
தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் ‘நான் முதல்வன்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இவற்றின் மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருதல், உயர் கல்விக்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளுக்கு தயாராக உதவி செய்தல், தொழில் முனைவோராக்க பயிற்சி அளித்தல் ஆகியவற்றுக்கு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் இன்போசிஸ் ஆகியவை இணைந்து கடந்த மாதம் 17 மற்றும் 18-ந் தேதிகளில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் வேலைக்கான நேர்காணலை நடத்தின. இதில் என்ஜினீயரிங் படித்த 6 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் வேலையை பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்புடன் பங்கேற்றனர்.
வேலைவாய்ப்பு
சென்னை, கோவை மற்றும் மதுரை மண்டலங்களில் இருந்து பங்கேற்ற 148 பேருக்கு சிஸ்டம் என்ஜினீயர் பணிக்கான வேலைவாய்ப்பினை இன்போசிஸ் நிறுவனம் வழங்கியது. இதில் சென்னையில் இருந்து 27 பேரும், கோவையில் இருந்து 62 பேரும், மதுரையில் இருந்து 59 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு இ-மெயில் மூலம் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ தகவல் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பெண் என்ஜினீயருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பினை விரிவாக்கம் செய்து, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இது முக்கியமான நடவடிக்கை ஆகும்.
புதிய பாதை
நான் முதல்வன், தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் இன்போசிஸ் ஆகியவை இணைந்து வேலைவாய்ப்பில் ஆர்வமும், துடிப்பும் உள்ளவர்களுக்கு புதிய பாதையை உருவாக்க தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
إرسال تعليق