நேர மேலாண்மையை திட்டமிடுவது எப்படி?  How to plan time management?
காலம், நேரத்தின் அருமை பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. நாம் உயிரோடு இருக்கும் இந்த நேரம், இந்த நொடி அவ்வளவு முக்கியமானது. சர்வ சாதாரணமாக இருப்பதால், அதன் அருமை சிலருக்கு புரியாது. ஒரு நிமிட தாமதத்தில் ரெயிலை தவற விட்டவர்களும் உண்டு. தேர்விற்கு உரிய நேரத்திற்கு செல்லமுடியாமல், தேர்வை கோட்டை விட்டவர்களும் உண்டு. அந்த வகையில், நேரம் எவ்வளவு இன்றியமையாதது? நேரத்தை பயனுள்ள வகையில் எப்படி மாற்ற வேண்டும்? சரியான நேர மேலாண்மையை பின்பற்றுவது எப்படி? என்பது பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம். 

அனுபவம் 

முதலில் நீங்கள் இதுவரையில் நேரத்தை எப்படி, எதற்கு எல்லாம் செலவு செய்துள்ளீர்கள் என்பதை அலசிப் பாருங்கள். அதற்கு ஒரு வாரத்தில் நீங்கள் செய்யும் காரியங்களையும், அதற்கு நீங்கள் செலவு செய்யும் நேரத்தையும் கண்காணியுங்கள். காலையில் எப்பொழுது எழுகிறீர்கள் என்பதில் தொடங்கி, அன்றைய நாளில் என்னென்ன காரியங்கள் செய்கிறீர்கள் என அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு செல்கிறீர்கள் என்றால், அதற்கு பயண நேரம் எவ்வளவு என்பதையும் குறிப்பெடுங்கள். இதற்கென பிரத்யேகமாக மொபைல் ஆப் உள்ளது. அவற்றை பயன்படுத்தலாம். இவ்வாறு நீங்கள் எடுத்துள்ள குறிப்புகளை வார இறுதியில் சரி பாருங்கள். நீங்கள் எவ்வளவு நேரத்தை வீணாக்கியுள்ளீர்கள் என்பதை உணர முடியும். அதே போல், ஒரு வேலை செய்யும் போது, நீங்கள் வேலையை மட்டும் சரியாக செய்கிறீர்களா? அல்லது கவனச்சிதறல் ஏற்பட்டு வேலையை தாமதமாக முடிக்கிறீர்களா? என்பதையும் பார்க்க வேண்டும். 

 திட்டமிடல் 

 ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யக்கூடிய வேலைகளை முடிந்த வரையில் முதல் நாளிலே திட்டமிட வேண்டும். சரியாக அந்த வேலைகளை, குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக முடிக்க வேண்டும். முக்கியமான அவசர வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை முதலில் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, முக்கியம் ஆனால் அவசரம் இல்லை என்ற ரீதியிலான வேலைகளை செய்ய வேண்டும். பின்னர், அவசரம் ஆனால் முக்கியமில்லை என்பது போன்ற வேலையை செய்ய வேண்டும். கடைசியாக அவசரமும் இல்லை, முக்கியமும் இல்லை என்ற நிலையில் இருக்கும் காரியங்களை செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் வேலைகளை முதல் நாளிலே திட்டமிட்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். குறிப்பாக நீங்கள் தேர்வு செய்துள்ள வேலைகளை எப்போது செய்ய வேண்டும், எவ்வளவு நேரத்தில் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். 

கவனச்சிதறல் 

 திட்டமிடல் எவ்வளவு முக்கியமோ, அந்த திட்டமிடலை முறையாக செய்து முடிப்பதில்தான் மொத்த பலனும் உள்ளது. நிறைய பேர் அழகாக திட்டமிட்டு, கால அட்டவணை எல்லாம் போட்டு விடுவார்கள். ஆனால், அதை செயல் படுத்தும்போது கோட்டை விட்டு விடுவார்கள். இதற்கு கவனச்சிதறலும், சோம்பலும் முக்கிய காரணமாக அமையும். முதலில் சோம்பல் இல்லாமல், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை தொய்வின்றி செய்ய வேண்டும். இரண்டாவது வேலை செய்யும்போது, வேறு எங்கேயும் கவனம் செலுத்தக்கூடாது. அவ்வாறு செயல்படும்போது குறித்த நேரத்தில் வேலைகளை செய்ய முடியும். 

 சரியான குறிக்கோள் 

 நீங்கள் எந்த வேலையை செய்யப்போகிறீர்கள் என்று சரியான குறிக்கோள் வைக்க வேண்டும். அதே போல், அந்த வேலையை இந்த நேரத்துக்குள்ளாக செய்து முடிக்க வேண்டும் என்று நீங்களாகவே ஒரு ‘டெட் லைன்’ வகுத்துக் கொள்ள வேண்டும். ஒரு காரியம் தடைப்பட்டு போனால், அதை தொடர்ந்து இருக்கும் அடுத்தடுத்த காரியங்களும் தடைப்பட்டு போகும். எனவே, நீங்கள் குறித்த நேரத்தில், உங்கள் வேலைகளை முடிப்பது மிக மிக முக்கியம். 

இரண்டு வகை வேலை 

பொதுவாக நம் வேலைகளை நாம் செய்யக்கூடிய விதத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று ‘ஷாலோ ஒர்க்’, மற்றொன்று ‘டீப் ஒர்க்’. ஷாலோ ஒர்க் (Shallow Work) என்பது நாம் நமது இஷ்டத்துக்கு வேலைகளைச் செய்வது. வேலை செய்யும் போது, சம்பந்தமே இல்லாமல் மற்றொரு காரியங்களில் ஈடுபடுவது. இவ்வாறு வேலை செய்தால், நமக்கு தொய்வு ஏற்படும். டீப் ஒர்க் (Deep Work) என்பது வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்தி, அந்த வேலையை வெற்றிகரமாக முடித்து கொள்வது. அதனால் டீப் ஒர்க் முறையில் பணியாற்றுவது நல்லது.

Post a Comment

Previous Post Next Post