சைக்கிள் பயணத்தில் இத்தனை நன்மையா? - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Sunday 28 April 2024

சைக்கிள் பயணத்தில் இத்தனை நன்மையா?

சைக்கிள் பயணத்தில் இத்தனை நன்மையா? 
பெருகிவிட்ட வாகனங்களால் கரியமில வாயுவும் அதிகரித்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக தூய்மையாக இருந்த பூமி, பெட்ரோல்-டீசல் பயன்பாடு வந்த பிறகு மிகமோசமாக இயற்கை சீரழிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, வாகனங்கள் வெளியேற்றும் நச்சுத்தன்மையுள்ள துகள்கள், ரசாயன பொருட்கள் கலப்பதால் காற்று மண்டலம் அசுத்தமாக உருவாகி வருகிறது. டெல்லி உள்பட பல்வேறு பெருநகரங்களில் காற்று சுவாசிக்க தகுதியில்லாததாக மாறி இருப்பது இதற்கு உதாரணம். பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டால் பசுமை வாயுக்கள் பாதிப்படைந்து, பருவநிலை மாற்றம், காடுகளில் நெருப்பு, வறட்சி உள்பட பல பிரச்சினைகள் உருவாவது கண்டறியப்பட்டு உள்ளது. வாகனங்களின் பயன்பாட்டை குறைத்தால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாத்து பூமியை பாதுகாக்க முடியும் என்று உலக நாடுகள் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன. இதற்கு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் முன் வைக்கும் ஒரே தீர்வு, குறைந்த தொலைவுகளுக்கு செல்ல மக்கள் சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும் என்பதுதான். ஒரு கணக்கெடுப்பின்படி உலக மக்கள் தொகையில் பெருமளவு மக்கள் அன்றாடம் பயணிக்கும் தொலைவு 3 கிலோ மீட்டர் அளவுக்கும் குறைவு. இவர்கள் இந்த தொலைவுக்கு கூட வாகனங்களை எடுத்து செல்வதால் மிகவேகமாக சுற்றுச்சூழல் மோசமடைகிறது. எனவே, பொதுமக்கள் குறைந்த தொலைவுகளுக்கு செல்ல சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் மக்களில் ஒரு சிறிய சதவீதத்தினர் சைக்கிளை பயன்படுத்த தொடங்கினால் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு வாயுவை கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதிர்கால சந்ததியினர் தூய காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் இப்போது இருந்தே பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து சைக்கிள் பயன்பாட்டை அனைத்து தரப்பு மக்களும் அதிகரிக்க வேண்டும். சைக்கிள் ஓட்டுவதால் உடலின் அனைத்து உறுப்புகளும் வலுவடைகின்றன. இதயநோய் தடுக்கப்படுகிறது. உடலின் தசைகள், எலும்புகள் உறுதியாகின்றன. மூட்டு தேய்மானம் தடுக்கப்படுகிறது. தேவையற்ற கொழுப்பு கரைக்கப்படுகிறது. மன அழுத்தம் தடுக்கப்படுகிறது. எனவே சைக்கிள் ஓட்டுவது தனிநபருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல வகையில் பயன் தரக்கூடியதாகும்.

No comments:

Post a Comment