போலியான வினாத்தாள்: மாணவர்கள் குழப்பம் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Monday 4 April 2022

போலியான வினாத்தாள்: மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 2 திருப்புதல் தேர்வு தொடர்பாக, சமூக வலைதளங்களில், போலி வினாத்தாள்கள் வெளியானதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பொது தேர்வுக்கு தயாராகும் வகையில், இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரியில் நடந்தது. 

அப்போது, பல பாடங்களுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே, 'லீக்' ஆகின. இதுகுறித்து, இரண்டு தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்நிலையில், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு, மார்ச், 28ல் துவங்கியது. இந்த தேர்வில் வினாத்தாள் லீக் ஆகாமல் இருக்க, முதன்மை கல்வி அலுவலர்களே வினாத்தாளை அச்சடித்து, பள்ளிகளுக்கு வழங்கும் நடைமுறை அறிமுகமானது. பள்ளிகளுக்கு இ- - மெயிலில் வினாத்தாள் அனுப்பும் முறை ரத்தானது. 


அதனால், எந்த பிரச்னையுமின்றி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விட்டன. விருப்ப மொழிப்பாடத்துக்கு மட்டும், இன்று தேர்வு நடக்கிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கும் பெரும்பாலான தேர்வுகள் பிரச்னையின்றி முடிந்து விட்டன. கணிதம், இயற்பியல், வணிகவியல், நர்சிங் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு இன்று தேர்வு நடக்கிறது. 

இதில், கணித தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகி விட்டதாக, சமூக வலைதளங்களில் நேற்று தகவல்கள் பரவின. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் விசாரித்ததில், அவை போலியான வினாத்தாள்கள் என்றும், மாணவர்களை குழப்பும் நோக்கில் மாதிரி வினாத்தாள்களை பதிவிட்டதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் நாளை துவங்க உள்ளன.

No comments:

Post a Comment