GATE: ஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பொறியியல் பட்டதாரித் தகுதித்தேர்வு - ஒரு வழிகாட்டல்! - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Tuesday 18 January 2022

GATE: ஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பொறியியல் பட்டதாரித் தகுதித்தேர்வு - ஒரு வழிகாட்டல்!

GATE: ஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பொறியியல் பட்டதாரித் தகுதித்தேர்வு - ஒரு வழிகாட்டல்! பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு (GATE) எழுத விரும்பும் மாணவர்களுக்கு என்ன கல்வித் தகுதி வேண்டும்? ஆன்லைனில் இந்தத் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science), இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) மற்றும் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றிருக்கும் மேற்படிப்புகளுக்கான இடங்களில் சேர்க்கை பெறுவதற்கும், இந்திய அரசின் சில பொதுத்துறை நிறுவனங்களில் பணியிடச் சேர்க்கைக்கும் தகுதியுடையதாக இருக்கும் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு – (Graduate Aptitude Test in Engineering – GAT) அடுத்த மாதம் நடைபெறுகிறது. தேர்வுக்கான அமைப்பு பெங்களூரிலிருக்கும் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science, Bangalore) மற்றும் மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், கோரக்பூர், சென்னை, ரூர்கி என ஏழு இடங்களிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) ஆகிய எட்டு கல்வி நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வினைச் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன. இச்சுழற்சி முறையில் 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வினைக் கோரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் நடத்தவிருக்கிறது. நுழைவுத் தேர்வுக்கான கல்வித்தகுதி பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதியுடையவராக இருக்க வேண்டும். நான்காண்டு கால (10+2+4 அல்லது 10+3+3) பொறியியல் / தொழில்நுட்பம் (BE / B.Tech) பட்டப்படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நடப்பு ஆண்டில் மூன்றாமாண்டு அல்லது இறுதியாண்டு படிப்பவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 2023 ஆம் ஆண்டில் இளநிலைப் பட்டம் பெற்றிடத் தகுதியுடையவராக இருக்க வேண்டும். ஐந்தாண்டு காலக் கட்டிடக்கலை (B.Arch) அல்லது நாண்காண்டு காலக் கடற்படைக் கட்டடக்கலை (Naval Architecture) அல்லது திட்டமிடல் (Planning) பட்டப்படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நடப்பு ஆண்டில் கட்டடக்கலைப் பட்டப்படிப்பில் நான்காமாண்டு அல்லது இறுதியாண்டு படிப்பவர்களாகவோ அல்லது கடற்படைக் கட்டடக்கலை அல்லது திட்டமிடல் பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு அல்லது இறுதியாண்டு படிப்பவர்களாகவோ இருக்க வேண்டும். அதாவது, கட்டடக்கலைப் படிப்பில் 2024 ஆம் ஆண்டிலும், கடற்படைக் கட்டடக்கலை அல்லது திட்டமிடல் பட்டப்படிப்பெனில் 2023 ஆம் ஆண்டிலும் இளநிலைப் பட்டம் பெற்றிடத் தகுதியுடையவராக இருக்க வேண்டும். நான்காண்டு கால அறிவியல் (B.Sc. (Research) / B.S) பட்டப்படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நடப்பு ஆண்டில் மூன்றாமாண்டு அல்லது இறுதியாண்டு படிப்பவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 2023 ஆம் ஆண்டில் இளநிலைப் பட்டம் பெற்றிடத் தகுதியுடையவராக இருக்க வேண்டும். 10+2 படிப்பிற்குப் பின்பு, ஆறாண்டு கால அளவிலான மருந்தாளுமைப் பட்டப்படிப்பில் (Pharm.D) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நடப்பு ஆண்டில் மூன்று / நான்கு / ஐந்து மற்றும் இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். அதாவது, 2025 ஆம் ஆண்டில் மேற்காணும் பட்டம் பெற்றிடத் தகுதியுடையவராக இருக்க வேண்டும். இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் (MBBS/BDS) பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றிடத் தகுதியுடையவராக இருக்க வேண்டும். கலை, அறிவியல், கணிதம், புள்ளியியல், கணினிப் பயன்பாடுகள் அல்லது அதற்கு இணையான படிப்புகளில் முதுகலைப் பட்டம் (M.A / M.Sc / M.C.A or Equivalent) பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருக்க வேண்டும். நான்காண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் (Int. M.E / M.Tech) அல்லது இளநிலை அறிவியல் (Post - B.Sc) படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் எந்த ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். தேர்வுத் தாள்கள் 

1. விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering - AE) 

2. மின்னியல் பொறியியல் (Electrical Engineering - EE) 

3. கப்பல் கட்டடக்கலை மற்றும் கடல் பொறியியல் (Naval Architecture & Marine Engineering - NM), 

4. வேளாண்மைப் பொறியியல் (Agricultural Engineering - AG) 

5. சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் (Environmental Science and Engineering ES), 

6. பெட்ரோலியப் பொறியியல் (Petroleum Engineering PE), 

7. கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் (Architecture and Planning - AR), 

8. சூழலியல் மற்றும் பரிமாணம் (Ecology and Evolution -EY)

 9. இயற்பியல் (Physics - PH), 

10. உயிர் மருத்துவப் பொறியியல் (Biomedical Engineering -BM), 

11. புவியல் மற்றும் புவி இயற்பியல் (Geology and Geophysics - GG), 

12. உற்பத்தி மற்றும் தொழிற்சாலைப் பொறியியல் (Production & Industrial Engineering - PI), 

13. உயிரித்தொழில்நுட்பம் (Biotechnology - BT), 

14. புவித்தகவல் பொறியியல் (Geomatics Engineering -GE), 

15. புள்ளியியல் (Statistics - ST) 16. குடிமைப் பொறியியல் (Civil Engineering - CE), 17. கருவிப் பொறியியல் (Instrumentation Engineering - IN), 

18. நெசவு பொறியியல் மற்றும் இழை அறிவியல் (Textile Engineering and Fibre Science - TF), 

19. வேதியியல் பொறியியல் (Chemical Engineering -CH), 

20. கணிதம் (Mathematics - MA), 

21. பொறியியல் அறிவியல் (Engineering Sciences - XE), 

22. கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Computer Science & Information Technology - CS), 

23. இயந்திரவியல் பொறியியல் (Mechanical Engineering - ME), 

24. கலையியல் மற்றும் சமூக அறிவியல் (Humanities and Social Sciences - XH), 

25. வேதியியல் (Chemistry - CY), 

26. உலோகவியல் பொறியியல் (Metallurgical Engineering - MT), 

27. வாழ்வியல் அறிவியல் (Life Sciences - XL), 

28. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் பொறியியல் (Electronics and Communication Engineering - EC),

 29. சுரங்கப் பொறியியல் (Mining Engineering - MN) என்று மொத்தம் 29 தாள்கள் இடம் பெற்றிருக்கின்றன. இத்தேர்வு எழுதுபவர்கள் மேற்காணும் தாள்களில், தங்களது படிப்பிற்கேற்ற ஏதாவதொரு தாளினையோ அல்லது இரு தாள்களையோ தேர்வு செய்து எழுத முடியும். 

விண்ணப்பம் 

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://gate.iitkgp.ac.in/ எனும் இணையதளத்தில் கிடைக்கும் தகவல் குறிப்புகளை (Information) முழுமையாகப் படித்துத் தெளிவாகத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். 

இத்தேர்வுக்குப் பொதுப் பிரிவினர் ரூ.1500/-, எஸ்சி. எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

தேர்வு மையங்கள் 

இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு மண்டலத்தில் 30 நகரங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மும்பை மண்டலத்தில் 30 நகரங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் டெல்லி மண்டலத்தில் 19 நகரங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் கவுகாத்தி மண்டலத்தில் 21 நகரங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் கான்பூர் மண்டலத்தில் 14 நகரங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் கோரக்பூர் மண்டலத்தில் 26 நகரங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் சென்னை மண்டலத்தில் 40 நகரங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ரூர்கி மண்டலத்தில் 22 நகரங்கள் என்று இந்தியா முழுவதும் 8 மண்டலங்களில் 202 முக்கிய நகரங்களில் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு (GATE 2022) நடைபெற இருக்கிறது. இந்தியத் தொழில்நுட்பக் கழகம் சென்னை மண்டலத்தில் இடம் பெற்றிருக்கும் 40 நகரங்களில், தமிழ்நாட்டில் சென்னை தெற்கு, சென்னை மேற்கு, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், நாகர்கோயில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் என்று 16 நகரங்கள் மற்றும் புதுச்சேரி என்று மொத்தம் 17 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிட் 19 கொரோனா நோய்த் தொற்றுச் சூழல் காரணமாக இந்த ஆண்டு வெளிநாடுகளில் தேர்வு மையங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. 

தேர்வு நாட்கள் 

பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வுக்கு (GATE 2022) விண்ணப்பித்தவர்கள், தங்களுக்கான அனுமதி அட்டையினை (Admit Card) 3-1-2022 முதல் https://gate.iitkgp.ac.in/ எனும் இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அனுமதி அட்டை தபால் வழியாகவோ, வேறு வழிகளிலோ அனுப்பி வைக்கப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 5-2-2022, 6-2-2022 மற்றும் 12-2-2022, 13-2-2022 ஆகிய நான்கு நாள்கள் நடைபெற இருக்கும் இத்தேர்வில் அனுமதி அட்டையில் குறிப்பிட்ட நாள், நகரம், மையத்தில் அனுமதி அட்டையுடன் சென்று தேர்வினை எழுதலாம். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட கடவுச்சீட்டு (Passport), நிரந்தரக் கணக்கு எண் அட்டை (PAN Card), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), ஆதார் அடையாள அட்டை (Aadhar UID), ஓட்டுநர் உரிமம் (Driving License) உண்மைப்பிரதியை அனுமதி அட்டையுடன் கொண்டு செல்ல வேண்டும். அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்வு நாட்களில் கோவிட் 19 கொரோனா நோய்த் தொற்றுச் சூழல் பரவல் அதிகமிருப்பின், அறிவிக்கப்பட்ட நாள்கள் மாற்றம் செய்யப்படலாம். 

தேர்வு முறை

மூன்று மணி நேரம் (180 நிமிடங்கள்) நடைபெறவிருக்கும் இந்தப் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வுக்கு (GATE 2022) மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வில் AE, AG, BM, BT, CE, CH, CS, CY, EC, EE, ES, EY, IN, MA, ME, MN, MT, NM, PE, PH, PI, TF, ST ஆகிய தாள்களுக்கு தாள்களின் முக்கியப் பாடத்திற்கு (Subject Marks) 85 மதிப்பெண்கள், AR எனும் தாளுக்கு [Part A + Part B1 or B2 (B1: Architecture or B2: Planning)] முக்கியப் பாடத்திற்கு 60+25 = 85 மதிப்பெண்கள், GE எனும் தாளுக்கு [Part A + Part B (Section I or Section II) முக்கியப் பாடத்திற்கு 55+30 = 85 மதிப்பெண்கள், GG எனும் தாளுக்கு [Part A + Part B (Section 1: Geology or Section 2: Geophysics)] முக்கியப் பாடத்திற்கு 25+60 = 85 மதிப்பெண்கள், XE எனும் தாளுக்கு (Section A + Any TWO Sections) முக்கியப் பாடத்திற்கு 15+(2X35) = 85 மதிப்பெண்கள், XH எனும் தாளுக்கு (Section B1 + Any ONE Section) முக்கியப் பாடத்திற்கு 25+60 = 85 மதிப்பெண்கள், XL எனும் தாளுக்கு (Section P + Any TWO Sections) முக்கியப் பாடத்திற்கு 25+(2X30) = 85 மதிப்பெண்கள் என்று கேள்விகள் இடம் பெற்றிருக்கும். அனைத்துத் தாள்களுக்கும் 15 மதிப்பெண்களுக்கான பொதுத்திறன் கேள்விகள் இடம் பெற்றிருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

தேர்வு முடிவுகள் 

பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு (GATE 2022) முடிவுகள் https://gate.iitkgp.ac.in/ எனும் இணையதளத்தில் 17-3-2022 அன்று வெளியிடப்படும். இத்தேர்வுக்கான மதிப்பெண் அட்டையினை (Score Card) 21-3-2022 முதல் 31-5-2022 வரை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மதிப்பெண் சான்றிதழினை அலுவலகத்திலிருந்து தனியாகப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 1-6-2022 முதல் 31-12-2022 வரை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நடைமுறைகளைப் படித்து, அதற்கான சிறப்புக் கட்டணமாக ரூ.500/- செலுத்திப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த மதிப்பெண் சான்றிதழ் மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும். 

தேர்வு மதிப்பெண் பயன்பாடு 

பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு (GATE 2022) மதிப்பெண் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science), இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) மற்றும் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிலிருக்கும் மேற்படிப்புகளுக்கான சேர்க்கை பெறுவதற்கு மட்டுமின்றி, பொறியியல், தொழில்நுட்ப மேற்படிப்புகள் மற்றும் ஆய்வுப் படிப்புகள் போன்றவைகளுக்கான நிதியுதவியினைப் பெறுவதற்கும் உதவுகின்றன. மேலும், இந்திய எண்ணெய்க் கழகம் (Indian Oil Corporation), தேசிய அனல் மின் நிறுவனங்கள் (National Thermal Power Corporation), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (Oil and Natural Gas Corporation), மின்கட்டமைப்புக் கழகம் (Power Grid Corporation) உள்ளிட்ட சில இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனப் பணிகளுக்கும் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு (GATE) மதிப்பெண் தகுதியும் ஒன்றாக இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கூடுதல் தகவல்கள் இத்தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus), பழைய கேள்வித்தாள்கள் (Old Question Papers) மற்றும் தேர்வு தொடர்பான தகவல்கள் (Examination Related Information) உள்ளிட்ட மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள https://gate.iitkgp.ac.in/ எனும் இணையதளத்தினைப் பார்க்கலாம். தமிழ்நாட்டிற்கான மண்டல அலுவலகமாக இருக்கும் சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அலுவலகத்தின் 044 - 22578200 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment