நோய் எதிர்ப்பு கொண்ட பாரம்பரிய நெல் விதைகள் ரிச்சாரியா என்ற அறிவியலாளர் ஆயிரக்கணக்கான உள்நாட்டு ரக நெல் விதைகளைச் சேகரித்து வைத்திருந்தார். மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனராக அவர் இருந்தபோது, நெட்டை ரகம் மட்டுமல்லாது நம் நாட்டுக்கே உரிய குட்டை ரகங்களையும் கண்டறிந்து வைத்

திருந்தார். சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள பஸ்தர் பகுதியில் ‘கடூர் சாலா’ என்ற பாரம்பரிய நெல் வகை எக்டேருக்கு 9.8 டன் விளைச்சலை தர வல்லது. 

அப்பகுதி பழங்குடிகள் நிறைந்த பகுதி. அவர்களிடம்தான் எண்ணற்ற அரிய வகை விதைகள் இருந்தன, இருக்கின்றன. அந்த விதை வளத்தை இன்றைய மேலை நாட்டு அறிவியல் உலகம் ஏற்க மறுக்கிறது. இதேபோல ‘பாடல் பூல்’ போன்ற குட்டை ரகமும் இருந்தன. இவை நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை. இவற்றை ஆதரித்த ரிச்சாரியா, நோய் எதிர்ப்புத் தன்மையற்ற அந்நிய விதைகளை ஏற்க மறுத்தார். 

இந்திய வேளாண் சந்தையை கைப்பற்ற, அந்நிய விதைகளை இந்தியாவில் பயன்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியை அமெரிக்கா ஏற்படுத்தியது. வீரிய விதைகள் எனப்படும் பசுமைப்புரட்சி விதைகளுக்கு அதிக அளவு உரம், நீர் போன்றவை தேவைப்படுகின்றன. ஏனெனில், இந்த விதைகள் ஆய்வகங்களில் வைத்து உருவாக்கப்படுகின்றன. 

இவற்றை கொழுக்க வைப்பதற்காக அதிக அளவு வேதி உரங்களை கொட்ட வேண்டும். அறிவியல் முறைப்படி ஒரு செடியானது, சவ்வூடு பரவல் என்ற முறையில் தனக்கான ஊட்டங்களை நீர் வழியாக எடுத்துக்கொள்கிறது. இப்போது பாசன நீருடன் வேதி உப்புகளை இடும்போது, பாசன நீரானது செறிவுமிக்கதாக மாறிவிடுகிறது. இதனால் பயிர்களில் உள்ள நீர்மம் வெளியேறிவிடுகிறது. இதை ஈடுசெய்வதற்காக அதிக அளவு நீர் பாய்ச்ச வேண்டும். இந்த பசுமை புரட்சி விதைகள் அதிகமாக வேதி உரங்களைச் சார்ந்து இருப்பதால், இவற்றின் தாக்கம் நீர் வளத்திலும் கைவைக்கிறது.

Post a Comment

أحدث أقدم