கல்வி கற்க வயது தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், மூதாட்டிகள் ஒன்று கூடி அ...ஆ.. என சிலேட்டில் எழுதி கல்வியை கற்று வருகிறார்கள். முந்தானை முடிச்சு நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் 1983ம் ஆண்டு வெளியான ‘முந்தானை முடிச்சு' என்ற திரைப்படத்தில் பள்ளிக்கூடத்தில் முதியோர்களுக்கு டீச்சராக இருந்து நடிகை பாடம் நடத்துவது போன்ற காட்சி காமெடிக்காக அமைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் நிஜமாகவே, திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் வயதான மூதாட்டிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் ஊர் நியாயம் பேசிக்கொண்டு இருக்கும் வயதான மூதாட்டிகள் சிறுபிள்ளைகளைப்போல சிலேட்டு, குச்சியுமாக வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று அ...ஆ, இ...ஈ, என எழுதவும், படிக்கவும் கற்கின்றனர். அவர்களுக்கு டீச்சராக சித்ரா உதவி புரிந்து பாடம் கற்பிக்கிறார். கற்போம் எழுதுவோம் திட்டம் ‘லிக்னா அபியான்' எனப்படும் கற்போம் எழுதுவோம் திட்டம்' மூலம் அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு, பள்ளிகள் மூலம் முறைசாரா கல்வி கற்பிக்கும் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதில் தமிழகத்தில் 2011ல் அடிப்படை கல்வி அறிவு இல்லாதோர் பற்றிய கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி 40 லட்சத்து 50 ஆயிரத்து 303 ஆண்கள், 83 லட்சத்து 80 ஆயிரத்து 226 பெண்கள் என ஒரு கோடியே 24 லட்சத்து 30 ஆயிரத்து 529 பேர் அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்கள் என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் அடிப்படை கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு தமிழகத்தில் 202021ம் கல்வி ஆண்டு முதல் செயல்படுத்த அனைத்து கல்வி திட்ட அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட, அடிப்படை கல்வி அறிவு இல்லாத 77 ஆயிரத்து 500 ஆண்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 500 பெண்களுக்கு கல்வி வழங்கப்பட உள்ளது. ஆர்வமாக வரும் மூதாட்டிகள் திருச்சி மாவட்டம், மணப்பாறை கல்வி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் 40 மையங்களில் தமிழ்நாடு முறைசாரா கல்வி இயக்கம் மூலமாக எழுத்தறிவு இயக்கம் "கற்போம் எழுதுவோம்" என்ற பெயரில் இயங்கி வருகின்றது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகளை எடுக்கின்றனர். ஆன்லைனில் பாடம் எடுத்தாலும் மாணவர்கள் சிலர் ‘கேம்’ விளையாடி கொண்டு ஆசிரியர்களுக்கு டிமிக்கி கொடுத்து வருகின்றனர். ஆனால் மூதாட்டிகள் அப்படி இல்லை. பள்ளி நேரத்திற்கு ஆர்வமாக போல வந்து விடுகிறார்கள். ஆங்கில கல்வி திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலத்தில் பிராட்டியூர் தொடக்கப்பள்ளியில் வயதான மூதாட்டிகள் ஆர்வத்துடன் கல்வி கற்று வருகிறார்கள். அந்த பள்ளியில் 50 வயது முதல் 75 வயது வரை உள்ள 15க்கும் மேற்ப்பட்ட மூதாட்டிகளுக்கு பாடம் கற்று கொடுக்கிறார் தலைமை ஆசிரியை சித்ரா. மூதாட்டிகள் பிழையாக எழுதினாலோ, தப்பாக பதில் சொன்னாலோ கோபப்படாமல், முகம் சுழிக்காமல் ஒரு பேத்தியைபோல இன்முகத்தோடு அவர்களுக்கு ஏற்றார் போல் பாடங்களை கற்றுக் கொடுக்கிறார். கையெழுத்து போட தெரியாத மூதாட்டிகள் இங்கு வந்து சில நாட்களில் ஆங்கிலத்தில் தங்கள் பெயரை எழுதும் அளவிற்கு தங்களை வளர்த்தும் கொண்டனர். அதோடு தங்களது கணவர் பெயரையும் எழுதியும், வாசித்தும் காட்டுகிறார்கள். இது குறித்து மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் கூறியதாவது: சான்றிதழ் வழங்கப்படும் பாடம் கற்க வரும் மூதாட்டிகளுக்கு 1ம் வகுப்பு, 2ம் வகுப்பு மாணவர்களை போல சரளமாக படிக்கும் அளவிற்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். மணிகண்டம் ஒன்றியத்தில் மட்டும் சுமார் 8,000 பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் உள்ளனர். அதில் 3,000 பேருக்கு பயிற்சி தரப்பட்டு அவர்கள் படிக்கும் அளவுக்கு தயார் செய்து விட்டோம். மீதமுள்ள 5,000 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. வயதானவர்கள் 800 பேருக்கு தொடக்கப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களில் 190 பேர் முதியவர்கள். எல்லோருமே 50 வயது முதல் 75 வயதுக்கு உட்பட்டவர்கள். அதுமட்டுமல்லாது நேரடியாக வீட்டிலும் சென்று அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் காலங்களில் இவர்களுக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தலாம். இவர்கள் படிப்பதை பார்த்து அவர்களது பேரக்குழந்தைகளும் படிப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. நன்கு படிப்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3ம் வகுப்பு அல்லது 5ம் வகுப்பு படித்தவர்கள் என்ற சான்றிதழ் வழங்கப்படும். 5ம் வகுப்பு புத்தகத்தை படித்து முடித்தால் அவர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாகவும், 3ம் வகுப்பு புத்தகத்தை படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் 3ம் வகுப்பு படித்தவர்கள் என்ற அங்கீகாரம் அளிக்கப்படும். இதில் சிறப்பாக படித்து தேர்ச்சி பெற்றவர்கள் NIOS (National Institute of Open Schooling) எனப்படும் தேசிய திறந்தநிலை கல்வி மூலம் 8ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை படிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post