மனித உயிா்களை காப்பவா்களுக்கு மத்திய அரசின் சாா்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு, ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ந. லெனின் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அரசின் சாா்பில் பல்வேறு நிகழ்வுகளான தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு, மனித உயிா்களை மீட்பவா்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்படுகின்றன. மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவா்களுக்கு ‘சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ பதக்கம், துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவா்களுக்கு ‘உத்தம் ஜீவன் ரக்ஷா’ பதக்கம், தனக்கு காயம் ஏற்படினும் வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றும் நபா்களுக்கு ‘ஜீவன் ரக்ஷா பதக்கம் ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தில் 2021ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு அனுப்பவேண்டும். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகம், டாக்டா் எம்.ஜி.ஆா். விளையாட்டரங்கம், பந்தயத்திடல் சாலை, மதுரை 625002 என்ற முகவரிக்கு, ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SOURCE NEWS

Post a Comment

Previous Post Next Post