790 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு 


790 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 30 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சிவில் சர்வீசஸ் தேர்வு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 26 வகையான சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. 


முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் இந்த பணிகளுக்கு தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு 790 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு, கடந்த ஆண்டு மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தக்கட்டமாக எழுதக்கூடிய முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். 

 முதன்மை தேர்வு முடிவு அதன்படி 10 ஆயிரத்து 556 பேர் முதன்மை தேர்வுக்கு தகுதியுடையவர்களாக தேர்வானார்கள். அவர்களுக்கான முதன்மைத்தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இந்த நிலையில் அந்த தேர்வுக்கான முடிவை www.upsconline.in, www.upsc.gov.in என்ற மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தபடியாக நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். 2,047 பேர் வெற்றி அகில இந்திய அளவில் முதன்மை தேர்வில் 2 ஆயிரத்து 47 பேர் வெற்றி பெற்று இருப்பதாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தெரியவந்துள்ளது. 


தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நேர்முகத்தேர்வு குறித்த விவரங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், மின் அழைப்பு கடிதம் மூலமாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

 மனிதநேய பயிற்சி மையம் இந்த முதன்மை தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி வழங்கி வந்தது. அதில் பயிற்சி பெற்றவர்களில் 19 மாணவர்களும், 11 மாணவிகளும் என மொத்தம் 30 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளையின் நிறுவன தலைவருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நேர்முகத்தேர்வுக்கு இலவச பயிற்சி முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி மனிதநேய பயிற்சி மையம் மூலம் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. 


இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முதன்மை தேர்வுக்கான நுழைவு சீட்டுடன் இன்று (புதன்கிழமை) முதல் சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள மனிதநேய பயிற்சி மையத்தில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். நேர்முகத்தேர்வுக்காக சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் சிறந்த பயிற்சி அளிக்கப்படும். 

தங்குவதற்கு இலவச விடுதி மற்றும் தரமான உணவு வழங்கப்படும். நேர்முகத்தேர்வில் பங்கு பெறுபவர்கள் டெல்லி சென்று வருவதற்கு விமான பயணச்சீட்டு வழங்கப்படும். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்து தரப்படும். மாணவர்களுக்கு தரமான காலணிகள், கோட்-சூட் மற்றும் மாணவிகளுக்கு புடவை, சுடிதார், காலணிகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post