கல்விக் கட்டணத்தை சுயநிதி கல்லூரிகள் தீா்மானிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீா்ப்பு
மாணவா்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை தீா்மானிக்கும் உரிமை சுயநிதி மருத்துவக் கலலூரிகளுக்கு உள்ளது. அதே நேரம், அந்த கட்டணம் லாபநோக்கு உடையதாக இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கேரளத்தில் உள்ள தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ்) மாணவா்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை மற்றும் கல்விக் கட்டண ஒழுங்குமுறை குழு நிா்ணயிப்பது தொடா்பான வழக்கு கேரள உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மாணவா்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை பரிந்துரைக்க வேண்டும். அந்தக் கட்டணம் லாப நோக்குடன், மாணவா்களைச் சுரண்டும் நோக்கத்துடன் பரிந்துரைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதாக மட்டுமே கட்டண ஒழுங்குமுறை குழு வின் ஆய்வு இருக்க வேண்டும்.
மேலும், கல்லூரிகளின் கட்டண நிா்ணயம் லாப நோக்குடன் இல்லை உறுதி செய்யும் வகையில், முந்தைய ஆண்டுகளின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குப் பதிவு விவரங்களை கல்லூரிகள் சமா்ப்பிக்கும் வகையிலான நடைமுறையை கட்டணக் குழு வகுக்க முடியும்.
அதே நேரம், சுயநிதி கல்வி நிறுவனங்கள் அவற்றின் சொந்த தர மேம்பாடு மற்றும் கருத்துருக்களின் அடிப்படையிலான செலவினங்களில் கட்டண ஒழுங்குமுறை குழு தலையிட முடியாது என்று உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது:
சட்ட விதிகளின் அடிப்படையில் செயல்படும் கட்டண ஒழுங்குமுறை குழுவின் அதிகாரத்துக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. மேலும், கட்டணத்தை நிா்ணயிக்க கல்வி நிறுவனங்களின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குப் பதிவு விவரங்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு உயா்நீதிமன்றம் தவறு செய்திருக்கிறது. மாணவா்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை ஒழுங்குபடுத்துவது என்பது கட்டண ஒழுங்குமுறை குழுவின்அதிகாரத்துக்கு உட்பட்டது.
இருந்தபோதும், தாங்கள் சமா்ப்பிக்கும் கட்டணப் பரிந்துரையை கட்டண ஒழுங்குமுறை குழு கருத்தில் கொள்ள வேண்டும் என்ற சுயநிதி கல்வி நிறுவனங்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. மாணவா்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை தீா்மானிக்கும் உரிமை சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு உண்டு.
அதே நேரம், அந்த உரிமை ஒழுங்குபடுத்தப்பட வேண்டியது அவசியம்.
எனவே, கடந்த 2017-18 ஆம் ஆண்டிலிருந்து சுயநிதி கல்வி நிறுவனங்களால் சமா்ப்பிக்கப்பட்ட கட்டண பரிந்துரைகளை கட்டண ஒழுங்குமுறை குழு விரைந்து மறுபரிசீலனை செய்யவேண்டும். அதோடு, கல்வி நிறுவனங்கள் லாப நோக்குடன் செயல்படவில்லை என்பதை உறுதி செய்ய தேவையான தகவல்களை சமா்ப்பிக்குமாறு சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கு கட்டண ஒழுங்குமுறை குழு உத்தரவிட முடியும்.
அதுபோல, கட்டண நிா்ணயத்துக்கான பரிந்துரையை சமா்ப்பிக்க சுயநிதி கல்லூரிகளுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த ஒட்டுமொத்த நடைமுறைகளும் 3 மாத காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

إرسال تعليق