1,598 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 31-ந்தேதி விண்ணப்பம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 


 தமிழ்நாடு பள்ளிக்கல்வி துணை சேவையில் வரும் தையல், ஓவியம், இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் போன்ற சிறப்பாசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, தற்போது காலியாக இருக்கும் 1,598 இடங்களுக்கும், இனி வரக்கூடிய காலி இடங்களுக்குமான அறிவிப்பாக இது வெளியிடப்படுகிறது. 

 இந்த பணியிடங்களுக்கு அடுத்த மாதம்(மார்ச்) 31-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற ஏப்ரல் மாதம் 25-ந்தேதி ஆகும். விண்ணப்பித்த தேர்வர்களுக்கான எழுத்து தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி நடைபெற இருக்கிறது. 95 கொள்குறி வகை வினாக்களுக்கு 2 மணி நேரம் 30 நிமிடத்தில் கணினி வாயிலாக பதில் அளிக்கக்கூடிய வகையில் இந்த தேர்வு நடைபெறும். 

 விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு அவர்களுக்கான பணிக்குரிய கல்வித் தகுதியை அறிவிப்பில் பார்த்து அதற்கேற்றாற்போல் சான்றிதழ்களை இணைத்து விண்ணபிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 கட்ட வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதும். மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم