Priority to student safety மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை; பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பேட்டி 


 மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இரவு உணவுக்குப் பின் சத்து மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10 மாதங்களுக்குப் பின் இன்று திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் சென்னையில் உள்ள பல்வேறு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

அதன் பிறகு சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்குத் தலா 10 மல்டி வைட்டமின் மாத்திரைகளும், ஜிங்க் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் இரவு உணவுக்குப் பிறகு மாத்திரைகளை உட்கொள்ளச் சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. 

 நேற்று மாலையே மாநிலம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் முடிந்துவிட்டன. நேற்று இரவு சத்து மாத்திரைகள் அனுப்பப்பட்டுவிட்டன. பள்ளிகள் இன்று தொடங்கப்பட்டுள்ள சூழலில், மாணவர்களிடையே இருக்கும் அச்ச உணர்வைப் போக்க, அவர்களுக்கு 2, 3 தினங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. கோவிட்-19 குறித்த விழிப்புணர்வு, பொதுத் தேர்வுக்குத் தயாராவது உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர். 

 ஒரு வகுப்புக்கு 25 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டியது அவசியம். வகுப்பறைக்கு வெளியிலும் பள்ளி வளாகங்களிலும் மாணவர்கள் குழுவாக அமர்வதோ, நின்று பேசுவதோ கூடாது. தொடர் ஆய்வுப் பணிகள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கு அந்தப் பாடங்களைக் கற்பிப்பர்'' என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.

Post a Comment

أحدث أقدم