Online Class Guinness World Record 24 மணி நேரம் ஆன்லைனில் வகுப்பு: கின்னஸ் சாதனையில் பங்கேற்ற ஆசிரியை 


சி.பி.எஸ்.இ., மற்றும் இன்டெல் நிறுவனம் இணைந்து, சமீபத்தில் மேற்கொண்ட, கின்னஸ் சாதனை முயற்சியில், கோவையில் இருந்து, ஆறுமுககவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சத்யபிரபாதேவி பங்கேற்று, பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார். செயற்கை நுண்ணறிவு மூலம், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒருநாள் ஆன்லைன் பயிற்சி பட்டறை, கடந்த அக்.,13ம் தேதி நடந்தது. தொடர்ந்து 24 மணி நேரம், இந்த ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்பதோடு, செயற்கை நுண்ணறிவு குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். 

இம்முயற்சியில், நாடு முழுக்க, தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.கோவை, தொண்டாமுத்துார், ஆறுமுககவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சத்யபிரபாதேவியும், இம்முயற்சியில் பங்கேற்றார். இவரை பாராட்டி, சி.பி.எஸ்.இ., சான்றிதழ் வழங்கியுள்ளது. 

 இதுகுறித்து, ஆசிரியை சத்யபிரபாதேவி கூறியதாவது:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இன்டெல் நிறுவனம் இணைந்து, கடந்த செப். மாதம், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி, செயல்திட்டங்கள் தயாரிப்பதற்கான கருத்துருக்கள் அனுப்பி வைக்கும் போட்டியை நடத்தியது.இதில், எங்கள் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தாரணி, சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி, குப்பை மேலாண்மை குறித்தும், மாணவி ஷோபனா ஆசிரியரில்லாத போது வகுப்பறையை மேலாண்மை செய்வது குறித்தும், மாணவி பிரியதர்ஷினி, ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட கைக்கடிகாரம் அணிவதன் மூலம், பாலியல் சீண்டல்களில் இருந்து விடுபடுவது குறித்தும், செயல்திட்டங்களை சமர்ப்பித்தனர்.நாடு முழுக்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், அரசுப்பள்ளி மாணவிகளும், ஆன்லைன் மூலம் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இச்செயல்திட்டங்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக தான், கின்னஸ் சாதனை முயற்சியில் பங்கேற்றேன். பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், இதில் பங்கேற்க பெரிதும் ஊக்கமளித்தனர். கிராமப்புற பள்ளி மாணவர்கள், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம், அவர்களின் தேடல் மேலும் விரிவடையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post