பொங்கலில் மணக்கும் கைதிகள் மஞ்சள் 


தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவார்கள். இதில் மங்களகரமான மஞ்சளும், தித்திக்கும் செங்கரும்பும் முக்கிய இடத்தை பிடிக்கும். பெரியவர்கள் பொங்கலிட்டு முடித்ததும் கரும்புகளை நறுக்கி சிறுவர், சிறுமிகளிடம் கொடுப்பார்கள். அதனை கடித்து, மென்று அதில் தித்திக்கும் சாற்றை உறிஞ்சுவது குழந்தைகளுக்கு பிடித்தமானது. 

மேலும் பொங்கல் வழிபாட்டில், மஞ்சள் குலையுடன் கூடிய செடியும் முக்கிய இடம் பெறும். வீடுகளிலும் மஞ்சள் செடி தோரணங்களால் அலங்கரிப்பார்கள். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கரும்பு மற்றும் மஞ்சள் செடிகள் குறைந்த அளவில் பயிரிடப்படுகிறது. நெல்லையில் கைதிகள் உழைப்பில் விளைந்த கரும்பும் பொங்கலில் சுவை தருவதும், மஞ்சள் குலைகள் மணம் வீசுவதும் மகிழ்ச்சியான விஷயம். பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டாக மட்டுமல்லாமல், மத்திய சிறைச்சாலையின் பெயரிலும் புகழ் பெற்றது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டி உருவாக்கப்பட்ட இந்த சிறையில் தற்போது 1,000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். 

இங்கு நன்னடத்தை கைதிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், அவர்கள் வெளியே சென்று சொந்த தொழில் செய்து வாழ்வை வசந்தமாக்கும் வகையிலும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் சிறை வளாகத்தில் உள்ள காலி இடத்தை தோட்டமாக உருவாக்கி, பல்வேறு பயிர்களும் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த சிறை வளாக தோட்டத்தில் மஞ்சள் அதிகளவிலும், கரும்பு குறைந்த அளவிலும் பயிரிடப்பட்டது. அவை அறுவடை செய்யப்பட்டு, சிறை வளாகத்தின் முன்பகுதியில் உள்ள சிறை அங்காடி மூலம் விற்பனை செய்யப்பட்டது. மேலும் சேனை கிழங்கும் விற்கப்பட்டது. 

அவற்றை பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காக மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் சொல்வதை இனி பார்ப்போம்... ‘‘பொதுவாக நாங்கள் கைதிகளை சிறைவாசிகள் என்று தான் அழைக்கிறோம். பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதிகளும், கோர்ட்டில் தண்டனை விதிக்கப்பட்ட தண்டனை கைதிகளும் இங்கு அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இதில் தண்டனை கைதிகளுக்கு மட்டும் பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

சிறையிலேயே நாட்களை கழிக்கும் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும், நல்வழிப் படுத்தவும் கைவினை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுதவிர ஆர்வமுள்ள நன்னடத்தை கைதிகளை தோட்ட பணிகளில் ஈடுபடுத்துகிறோம். கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு தேவையான செங்கரும்பு, மஞ்சள், சேனைக்கிழங்கு உள்ளிட்டவற்றை விளைவித்து விற்பனை செய்து வருகிறோம். மேலும் கத்தரி, சிறுகிழங்கு உள்ளிட்டவற்றையும், வாழை, தென்னை போன்றவற்றையும் கைதிகள் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். இதனால் கைதிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. மேலும் சிறை வளாகமும் பசுமையாக காட்சி அளிக்கிறது’’ என்கிறார்கள்.

Post a Comment

أحدث أقدم