தூய தமிழ்ப்பற்றாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு 


தூய தமிழ்ப்பற்றாளர் விருது பெறுவதற்காக விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  

 சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சி திட்டம்

தமிழக அரசின் அகர முதலி திட்ட இயக்ககம், கலைச் சொல்லாக்கம், தூய தமிழ் கலப்பு இல்லாமல் பேசுவதை ஊக்குவிப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது. இன்றைய காலத்தில் நாள்தோறும் பெருகிவரும் பல துறை சார்ந்த சொற்களுக்கு இணையான தமிழ் கலைச் சொற்களை உருவாக்குவதற்கு சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சி திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதேபோல தூய தமிழ்ப்பற்றாளர் விருது, தூய தமிழ் ஊடக விருது மற்றும் நற்றமிழ்ப் பாவலர் விருது ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் அகராதியியல் நாள் விழாவின்போது இயல்பாகவே தூய தமிழில் பேசுகின்ற தகுதி வாய்ந்தவர்களை 37 மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் வீதம் தேர்வு செய்து அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் தகுதி உரை வழங்கப்பட உள்ளன.  

 விண்ணப்பிக்கலாம்
இதேபோல தூய தமிழ்ச் சொற்களையும், காலத்திற்கேற்ப புதிய கலைச்சொற்களையும் பயன்படுத்தி மக்களுக்கு செய்திகளை வழங்கும் ஒரு காட்சி ஊடகத்தையும், ஓர் அச்சு ஊடகத்தையும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்ககத்தின் வழியாக தேர்வு செய்து, தமிழ் அகராதியியல் நாள் விழாவில் ‘தூய தமிழ் ஊடக விருது'ம், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. விருது தொகையாக ஒரு ஊடகத்துக்கு ரூ.50 ஆயிரமும், தங்கப்பதக்கமும், தகுதியுரை சான்றிதழும் வழங்கப்படும். தூய தமிழ்ப்பற்றாளர் விருது பெற தகுதிவாய்ந்த, விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தூய தமிழ் ஊடக விருது பெற தகுதி வாய்ந்த ஊடக நிறுவனங்கள் சொற்குவை.காம் (sorkuvai.com) என்ற வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நிரப்பி வருகிற 29-ந் தேதிக்குள், agarathimalar2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இயக்குனர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை-600028 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம். மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post