அரசு உதவி பள்ளி நியமனங்கள் விதி ஏற்படுத்த ஐகோர்ட் அறிவுறுத்தல் 


சென்னை: 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, கோனேரிராஜபுரத்தில், வடமட்டம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இது, அரசு உதவி பெறும் பள்ளி. அலுவலக உதவியாளர் பணி காலியானதால், நியமன நடவடிக்கையை, பள்ளி நிர்வாகம் எடுத்தது. முருகன் என்பவரை நியமித்து, மாவட்ட கல்வி அதிகாரியின் ஒப்புதல் கோரியது. மாவட்ட கல்வி அதிகாரி அனுமதி மறுத்தார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், &'அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாதவர் நியமனங்களுக்கு, அனுமதி கோர வேண்டியதில்லை&' என, உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பள்ளி கல்வித் துறை இயக்குனர், திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரி தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, &'முதல் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாகும் போது, அதில், புதிதாக நியமன நடவடிக்கையை மேற்கொள்ள, கல்வித் துறையின் முன்அனுமதி பெற வேண்டுமா என்ற, கேள்வி எழுகிறது. இதற்கு, கல்வித்துறை தரப்பில், எந்த விதியும், அறிவிப்பாணையும் இருப்பதாக சுட்டிக்காட்ட வில்லை. அருகில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில், உபரி பணியாளர்கள் இருக்கலாம். நியமன நடவடிக்கைகள் மேற்கொண்டு, ஒருவரை அடையாளம் கண்ட பின், உபரி பணியாளர் இருக்கிறார் என்பதை காரணம் காட்டி, நியமனத்தை மறுக்க முடியாது. எனவே, நியமன நடைமுறையை மேற்கொள்ளும் முன், அரசு உதவி பெறும் பள்ளிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என்ற விதியை, கல்வித்துறை ஏற்படுத்தலாம். குறிப்பிட்ட அவகாசத்துக்குள், மாவட்ட கல்வி அதிகாரி பதில் அளிக்க வேண்டும். உபரி பணியாளர்கள் எண்ணிக்கை, பணி பற்றிய விபரங்களை, அனைத்து பள்ளிகளுக்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியும் அனுப்பலாம். இந்த அம்சங்கள் எதுவும் இல்லாத நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களுக்கு நியமன நடவடிக்கையை மேற்கொள்ளும், அரசு உதவி பெறும் பள்ளிகளை குற்றம் காண முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, மாவட்ட கல்வி அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற, விதி இல்லாத போது, பள்ளியை குறை கூற முடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிட முடியாது. இவ்வாறு, உத்தரவிட்டது.

Post a Comment

Previous Post Next Post