லாஜிஸ்டிக் துறை படிப்புகளும்.. வேலைவாய்ப்புகளும்.. 


 என்ஜினீயரிங், மருத்துவம், நிர்வாக படிப்புகளிலும், அவை சார்ந்த பணிகளிலும் கவனம் செலுத்தும் நமக்கு, லாஜிஸ்டிக் துறை பற்றியும், அதிலிருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றியும் அதிகம் தெரிந்திருக்காது. லாஜிஸ்டிக் என்பது உலகளவில் அதிகப்படியான வேலைவாய்ப்பு நிறைந்த துறை. கொரோனா பேரிடர் காலத்திலும் சுறுசுறுப்பாக இயங்கிய துறை. நமக்கு பெரிதும் அறிமுகமில்லாத லாஜிஸ்டிக் துறையை, ஜெயஸ்ரீ பாலசந்திரன் முறைப்படி அறிமுகப்படுத்துகிறார். லாஜிஸ்டிக் துறையில் 20 வருட கால அனுபவம் பெற்றவரான இவர், அதிலிருக்கும் வேலைவாய்ப்பு, உலக வர்த்தகம் பற்றி விளக்கமாக பேசுகிறார்.  

 * ‘லாஜிஸ்டிக்’ எந்த மாதிரியான துறை?

உலகின் ஒரு மூலையில் உற்பத்தியாகும் பொருளை, மற்றொரு மூலைக்கோ அல்லது அந்த பொருளுக்கு தேவை இருக்கும் பகுதிக்கு கொண்டு சென்று, அப்பகுதி மக்களிடம் சேர்ப்பதுதான் லாஜிஸ்டிக் துறையின் வேலை. விமான சேவை, தரை வழி போக்குவரத்து, கடல் வழி போக்குவரத்து என எதில் வேண்டுமானாலும் பொருட்களை கொண்டு செல்லலாம். உரிய இடத்தில், உரியவர்களிடத்தில் கொண்டு சேர்த்து, அதன் தேவையை பூர்த்தி செய்யும் சேவையைதான் லாஜிஸ்டிக் துறை செய்து வருகிறது.  

 * லாஜிஸ்டிக் துறையில் நீங்கள் நுழைந்தவிதம் பற்றி கூறுங்கள்?

நான் படித்தது, பி.எஸ்.சி.விலங்கியல். ஒரு நிறுவனத்தில் ரிசப்சனிஸ்டாக பணியாற்றிக்கொண்டிருந்தபோது, லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. செக்கரேட்டரியாக பணியை தொடங்கி, லாஜிஸ்டிக் துறையின் பல பொறுப்புகளில் பணியாற்றினேன். வாடிக்கையாளர் பிரதிநிதி, ஆவண தயாரிப்பு பணி, இறக்குமதி அலுவலர் என பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். பிறகு உலகளவில் பிரபலமான மற்றொரு லாஜிஸ்டிக் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். அங்கு 17 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, 2014-ம் ஆண்டு பணியில் இருந்து வெளியேறினேன். பணியில் இருந்தபோதுதான் லாஜிஸ்டிக் தொழில் சம்பந்தமாக உலகின் பல பகுதிகளுக்கு சென்று, உயர் பதவி பிரதிநிதிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான், லாஜிஸ்டிக் துறையில் இவ்வளவு வேலைவாய்ப்பு இருப்பதையே தெரிந்து கொண்டேன்.  

 * தற்போது லாஜிஸ்டிக் துறையில் என்ன செய்கிறீர்கள்?

லாஜிஸ்டிக் துறையில் இருந்து விலகிவிட்டாலும், அதனுள் நிலவும் வேலைவாய்ப்புகள், ஆள் பற்றாக்குறை, தேவை போன்ற கள நிலவரங்களை அறிந்து கொள்ள முடியும். அதனால் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள்-இளம் பெண்களுக்கு லாஜிஸ்டிக் துறையில் கால்பதிக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தேன். இதற்காக வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றையும் நிறுவினேன். பெரிய அளவிலான வேலைவாய்ப்புகள் காத்திருந்தாலும், மாணவர்களின் ஒரு சில தவறு களால், வாய்ப்புகள் தட்டி கழிந்தன. உதாரணத்திற்கு, போதிய ஆங்கில அறிவு இல்லாததாலும், லாஜிஸ்டிக் துறை பற்றிய போதிய புரிதல் இல்லாததாலும், ஏராளமான மாணவர்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர். அதேசமயம் வேலைவாய்ப்புக்கான கதவு எப்போதும் லாஜிஸ்டிக் துறையில் திறந்தே இருந்தது. இதை சரிக்கட்ட 2016-ம் ஆண்டு ஒரு பயிற்சி நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் லாஜிஸ்டிக் துறை சம்பந்தமான புரிதலை மாணவர்களிடையே வளர்த்தெடுத்தேன். 6 மாத டிப்ளமோ படிப்பின் மூலம் லாஜிஸ்டிக் துறையை பாட ரீதியாகவும், ‘இன்டர்ன்சிப்’ அடிப்படையில் பயிற்சி வாயிலாகவும் கற்றுக்கொடுத்தேன். என்னுடைய முயற்சியால் கொரோனா ஊரடங்கு காலத்திலும் சில மாணவர்கள் ஆன்லைன் முறையில் லாஜிஸ்டிக் பயின்று, பணியில் சேர்ந்திருக்கின்றனர்.  

 * யாரெல்லாம் லாஜிஸ்டிக் துறையை தேர்ந்தெடுக்கலாம்?

லாஜிஸ்டிக் துறையில் யார் வேண்டுமானாலும் சேரலாம். படிக்கலாம். பணியாற்றலாம். பி.எஸ்.சி., பி.காம்., ஓட்டல் மேனேஜ்மெண்ட், என்ஜினீயர்கள், எம்.பி.ஏ. என வெவ்வேறு பட்டப்படிப்புகளை முடித்தவர்களும், தற்போது லாஜிஸ்டிக் துறையை விரும்பி படிக்கிறார்கள். இது உலகளாவிய வர்த்தகம் சம்பந்தப்பட்ட துறை என்பதால், ஆங்கில அறிவும், சிந்தித்து செயல்படும் திறனும் அவசியமாகிறது.  

 * தமிழ்நாட்டில் லாஜிஸ்டிக் சம்பந்தமான படிப்புகள் என்னென்ன உள்ளன?

சமீபத்தில் லாஜிஸ்டிக் துறையை இளைஞர்கள் தேட ஆரம்பித்திருப்பதால், ஒருசில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பி.பி.ஏ. மற்றும் எம்.பி.ஏ. படிப்பில் லாஜிஸ்டிக் படிப்பை சேர்த்திருக்கிறார்கள். இதுபோக தனியார் நிறுவனங்களும் லாஜிஸ்டிக் படிப்பை குறுகிய கால டிப்ளமோ, நீண்ட கால படிப்பு முறையில் பாட கல்வியாகவும், பயிற்சி கல்வியாகவும் வழங்கி வருகிறது.  

 * லாஜிஸ்டிக் துறையில் எத்தகைய வேலைவாய்ப்புகள் உள்ளன?

லாஜிஸ்டிக் துறை என்றதும், சரக்கு பெட்டிகளை தூக்கி இறக்கும் வேலை என தவறாக நினைத்துவிடாதீர்கள். லாஜிஸ்டிக் துறையில் ‘புளூ காலர்’ பணிகளைவிட, ‘ஒயிட் காலர்’ பணிகளே அதிகமாக இருக்கிறது. அதாவது மார்க்கெட்டிங் அதிகாரி, கஸ்டமர் சர்வீஸ் ஆபிசர், டாகுமன்டேஷன், ஐ.டி., மனிதவளம், சப்போர்ட், உற்பத்தி, மேலாண்மை, சரக்கு சேமிக்கும் கிடங்கு.... இப்படி மேம்பட்ட வேலைவாய்ப்புகள் நிறைந்திருக்கிறது. ‘நேஷனல் ஸ்கில் டெவலெப்மெண்ட்’ அமைப்பின் கணிப்புப்படி, 2022-ம் ஆண்டில், லாஜிஸ்டிக் துறையில் 21 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. அதுவும் இந்தியாவில் மட்டும்.  

 * லாஜிஸ்டிக் துறை படிப்புகளுக்கு எவ்வளவு செலவாகும்?

பிரிவு சார்ந்த பணிகளுக்கு ஏற்ப ரூ.20 ஆயிரத்தில் தொடங்கி, ரூ.1 லட்சம் வரைக்கும் படிப்புகள் இருக்கின்றன. பிளஸ்-2 படித்தவர்களுக்கு தனி படிப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு தனிப்படிப்பு, லாஜிஸ்டிக்கில் உயர்கல்வி பெற தனிப்படிப்பு என படிப்பிற்கு ஏற்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  

 * லாஜிஸ்டிக் துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறதா?

ஏன் இல்லை?. லாஜிஸ்டிக் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளும் இருக்கிறது. கஸ்டமர் சப்போர்ட், சரக்கு கிடங்கு பராமரிப்பு பணிகள், மனித வளம் போன்ற பிரிவுகளில் பெண்கள் பணியாற்றுகிறார்கள். பெண்கள் லாஜிஸ்டிக் துறையில் சாதிக்கமுடியுமா? என்று சந்தேக கேள்வி கேட்பவர்களுக்கு நானே சாட்சி.  

 * லாஜிஸ்டிக் துறையில் தொழில் தொடங்குவது சிறப்பானதாக அமையுமா?

முதலில் லாஜிஸ்டிக் துறையை புரிந்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி, அதிலிருக்கும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, உள்ளூர் உற்பத்தியாளரின் துணையோடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, லாபம் பெறலாம்.  

 * கொரோனா காலத்திலும் லாஜிஸ்டிக் துறையில் இருந்த வேலைவாய்ப்புகளை பற்றி கூறுங்கள்?

கொரோனா அச்சுறுத்தலில், உலகமே வீட்டிற்குள் முடங்கி கிடந்த காலத்திலும், லாஜிஸ்டிக் துறை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. காய்கறிகள், பழங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், கொரோனா தடுப்பு கருவிகள், கவச உடைகள், முக கவசங்கள், கை உறைகள்... என பலவிஷயங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்தும், இந்தியாவில் உற்பத்தியான பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பணிகளிலும் பிசியாக இருந்தோம்.

Post a Comment

Previous Post Next Post