தபால்துறை கணக்காளர் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு, டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய தபால்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய தபால்துறையில் தமிழக பிரிவுக்கு கணக்காளர்களை நியமிக்க, பிப்ரவரி 14-ந் தேதி தேர்வு நடைபெற இருக்கிறது. ஆனால் இத்தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில்தான் நடத்தப்படும் என்று கடந்த 4-ந் தேதி சென்னை மண்டல தபால்துறை அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தபால்துறை 4-ம் நிலை பணியாளர் தேர்விலும் இதேநிலை ஏற்பட்டபோது எதிர்ப்பு கிளம்பியது. இதனைத்தொடர்ந்து இத்தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டு, தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் இத்தேர்வு நடைபெறும் என்று நாடாளுமன்றத்தில் நீங்கள் உறுதியளித்தீர்கள். இதுதொடர்பான ஒரு பொதுநல வழக்கிலும் தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளில் தபால்துறை தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
தமிழ் மொழி மற்றும் தமிழக இளைஞர்களின் உணர்வை மதிக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தில் நீங்கள் அளித்த உறுதிமொழியை பாதுகாக்கும் வகையிலும் தமிழ் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
எனவே கடந்த 4-ந் தேதி தபால்துறை வெளியிட்டுள்ள அறிக்கையை ரத்து செய்து, தமிழ் மொழி வழியாகவும் கணக்காளர் தேர்வு நடைபெறும் என புதிய அறிக்கையை வெளியிட்டு, தமிழக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தன்மையையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தபால்துறை கணக்காளர் தேர்வு
தமிழிலும் நடத்த வேண்டும்

Post a Comment