3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 


 சென்னை: 

அடுத்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் ஜன.,12ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும். நாளை (ஜன.,05) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறில் தலா 6 செ.மீ., அறந்தாங்கியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post