‘சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்’: பிரதமர் மோடி


 நாடு முழுவதும் சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று மாநில முதல்வர்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கரோனா தடுப்பூசியை விநியோகிக்க மாநிலங்களில் செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கரோனா தொற்றின் நெருக்கடி காலத்தில் விரைவான முடிவுகள் எடுக்கப்பட்டு நாடு முழுவதும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டோம். இதன் விளைவாக, நாட்டில் கரோனாவை பெரிதளவில் பரவவிடாமல் தடுத்துள்ளோம். ஜனவரி 16-ம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்க உள்ளோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகளுக்கு அவசரக் கால ஒப்புதல் அளித்துள்ளோம். முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த 3 கோடி பேருக்கு போடப்பட உள்ள தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு அதிகமாக உள்ளோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. 3-ம் கட்டமாக 50 வயதுக்கு கீழ் உள்ளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இன்னும் சில மாதங்களில் 30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படப்படும். வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகளை போல அல்லாமல் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த 2 தடுப்பூசிகளும் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பறவைக் காய்ச்சலானது, கேரளம், ராஜஸ்தான், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு பரவியுள்ளது. அதை தடுப்பதற்கு, பண்ணை, உயிரியல் பூங்கா போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.

Post a Comment

أحدث أقدم