பெண்கள் திருமண வயது 21; ஆய்வுக் குழு பரிந்துரை 


 மத்திய அரசு அமைத்த ஆய்வுக் குழு, பெண்களின் திருமண வயதை, 18 லிருந்து, 21 வயதாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது. கடந்த, 1930ல், குழந்தை திருமண தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. 'சாரதா சட்டம்' என்றழைக்கப்படும் இதில், பெண்களுக்கான திருமண வயது, 14 ஆகவும், ஆண்களுக்கு, 16 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த சட்டம், பின்னாளில் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் திருமண வயது, 18 எனவும், ஆண்களுக்கு, 21 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது பேசிய பிரதமர், மோடி, 'இளம் வயது பெண்கள், ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதை தடுக்க, அவர்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆராய, குழு அமைக்கப்பட்டுள்ளது' என்றார். 

சமதா கட்சி முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி மற்றும் 'நிடி ஆயோக்' உறுப்பினர், வி.கே.பால் தலைமையில், 10 வல்லுனர்கள் அடங்கிய குழு, பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்தது. இதையடுத்து, இக்குழு அதன் அறிக்கையை, பிரதமர் அலுவலகத்திற்கும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில், 'பெண்களின் திருமண வயதை, 18 வயதில் இருந்து, 21 வயதாக உயர்த்தலாம்' என, பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால், ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக, கர்ப்பிணிகள் இறப்பது குறையும். அதிக அளவிலான பெண்கள், கல்லுாரிகளிலும், திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களிலும் சேருவர். பெண்கள், பொருளாதார ரீதியில் வலிமை பெறவும், இந்த சட்ட திருத்தம் உதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.- 



Post a Comment

Previous Post Next Post