2019-ம் ஆண்டு போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல் 


சென்னை, ஜன.13- 

 தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த 3½ ஆண்டுகளுக்கும் மேலாக நியாயமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 5,068 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கான குறிப்பாணைகளைப் பிறப்பித்திருக்கிறது. இந்த குறிப்பாணைகளால் கடந்த 2 ஆண்டுகளில் பணி ஓய்வுபெற்ற 42-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குரிய ஓய்வூதிய பயன்களைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பணிக்காலம் முடிந்துவிட்டது என்றாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் பணி ஓய்வைப்பெற முடியவில்லை. இதனால் அவர்களும், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, 5,068 பேர் மீதான நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post